நாராயணன் திருப்பதி: துணிவா ஒரு தாக்கு… ஓடிடியில் தரக்குறைவா, அதுவும் அந்த நடிகரே!

திரைப்படங்கள் வெறுமனே பொழுதுபோக்கு அம்சங்கள் என்பதை தாண்டி பொதுமக்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு மாறிவிட்டன. எனவே திரையில் காட்டப்படும் ஒவ்வொரு விஷயத்திலும் மிகவும் கவனம் தேவை. அப்படி எதுவும் தவறுகள் நேரக் கூடாது என்பதற்காக தான் திரைப்பட சான்றிதழ் வாரியம் செயல்பட்டு வருகிறது. இந்த குழுவினரிடம் படத்தை போட்டு காண்பித்து உரிய விதிகளின் காட்சிகள் இருக்கின்றனவா? என்பது கண்டறியப்படும். விதிமீறல்கள் உள்ள காட்சிகள், வசனங்கள் நீக்க அறிவுறுத்தப்படும்.

ஓடிடி திரைப்படங்கள்

அதன்பிறகு மீண்டும் பார்வையிட்டு திரைப்படத்தை வெளியிட சான்றிதழ் அளிப்பர். சமீப காலங்களில் இணைய வழி திரை எனப்படும் ஓடிடி மூலம் நிறைய படங்கள் வெளிவருகின்றன. அதில் திரைப்பட சான்றிதழ் வாரியம் எது தவறு, ஆபாசம், விதி மீறல் என்று குறிப்பிட்டு நீக்க பரிந்துரை செய்ததோ அவைகளையும் இணைத்து திரையிடுகின்றனர். இது சமுதாயத்திற்கு தீங்கிழைக்கும் செயல் என்பதற்கு மாற்று கருத்தில்லை.

பொங்கல் ரிலீஸ்

இந்நிலையில் பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி முக்கிய கருத்தை முன்வைத்துள்ளார். அதாவது, சமீபத்தில் பொங்கலையொட்டி வெளியான ஒரு பிரபல நடிகர் நடித்த படத்தில் இடம்பெறாத சில காட்சிகளும், வசனங்களும் OTT திரையில் வெளியிடப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. அந்த படத்தில் தரக்குறைவான வார்த்தைகளை அந்த பிரபல நடிகரே உச்சரிப்பது கடும் கண்டனத்திற்குரியது.

திரைப்பட தணிக்கை

குறிப்பாக பலமுறை திரைப்பட சான்றிதழ் வாரிய குழுவால் நீக்கப்பட்ட வார்த்தைகள் இடம்பெற்றுள்ளது சமுதாய சீரழிவுக்கே வழிவகுக்கும். இது குறித்து அந்த திரைப்படம் தொடர்பான முக்கிய பிரமுகர் ஒருவரிடம் பேசிய போது, இது போன்ற தகாத, தீய சொற்களை தமிழக இளைஞர்கள் அதிகம் விரும்புவதாக சொன்னது பேரதிர்ச்சியை அளிக்கிறது.

சட்டத்திற்கு புறம்பானது

தங்களின் பட வெற்றிக்காக, வியாபாரத்திற்காக அடுத்த தலைமுறையை சீரழிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இணைய வழி திரைக்கு சில சுய கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது அரசு. அதை பின்பற்ற வேண்டியது திரை துறையினரின் கடமை. எது தவறு, தீங்கானது, ஆபாசமானது, சட்டத்திற்கு புறம்பானது என்று குறிப்பிடப்பட்டு திரைத் துறையினரால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அகற்றப்பட்டதோ, அதையே வேறொரு வழியில் மக்களிடம் கொண்டு செல்வது துரோகம் அல்லவா?

திரைத்துறை கடமை

குறிப்பாக தங்களின் ஆதர்ச நாயகர்களாக பாவித்து கொண்டிருக்கும் இளைய சமுதாயத்தை சீரழிக்கும் விதத்தில் காட்சிகளோ, வசனங்களோ இடம்பெறாமல் கவனித்து கொள்ள வேண்டியது பிரபல கலைஞர்களின் கடமையல்லவா? பிரபலமான நடிகர்கள், இயக்குனர்கள் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டாமா? அரசின் வழிகாட்டுதல்களின் படி, சட்டத்தின் அடிப்படையில் நடக்க வேண்டியது திரைத்துறையினரின் கடமை மற்றும் பொறுப்பு.

நாராயணன் திருப்பதி குற்றச்சாட்டு

அதை விடுத்து, பணத்திற்காக, வியாபாரத்திற்காக சமூகத்தை சீரழிக்கும் அவலங்களை திணிப்பது கேட்டை விளைவிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். இதில் பொங்கலுக்கு திரைக்கு வந்து அதன்பிறகு ஓடிடியில் வெளியான திரைப்படம் அஜித் நடித்த துணிவு. எனவே அஜித்தை தான் நாராயணன் திருப்பதி குறிப்பிடுவது தெரிகிறது. ஆனால் அவர் பெயரை நேரடியாக சொல்ல ஏன் மறுக்கிறார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.