அதிரவைக்கும் ஆசிரம விவகாரம்; சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்ட வழக்கு விசாரணை – பின்னணி என்ன?

முதியவர் ஒருவர் காணாமல் போனதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட ஆட்கொணர்வு மனுவின்படி வெளிப்பட்ட அன்பு ஜோதி ஆசிரமம் தொடர்பான பின்னணி தகவல் தமிழக அளவில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

சுமார் 15 ஆண்டுகளாக ஆசிரமம் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்ததாகவும், மனவளர்ச்சி குன்றியோர் கடுமையாகத் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், வளர்ப்பு குரங்குகள் மூலம் கடிக்க வைத்து அவர்களைக் கொடுமை செய்ததாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள் பாலியல் தொல்லை மற்றும் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது.

அதோடு, இந்திய அளவில் உள்ள சில காப்பகங்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு, மாயமானவர்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் எனவும், அனாதை பிணங்களுடன் சேர்த்து எரிக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுவது மேலும் பகீர் கிளப்பியிருக்கிறது. இந்த ஆசிரமத்துக்கு எதிராக அடுத்தடுத்து புதிய புகார்கள், கண்டனங்கள் கிளம்பியுள்ள நிலையில், இந்த ஆசிரமம் தொடர்பான வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றி உத்தரவிட்டிருக்கிறார் தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு.

ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்டோர்

விழுப்புரம் மாவட்டம், கெடார் அருகிலுள்ள குண்டலப்புலியூரில் இயங்கி வரும் இந்த அன்பு ஜோதி ஆசிரமம், விழுப்புரம் – செஞ்சி நெடுஞ்சாலை ஓரமாகவே அமைந்திருந்தாலும், குண்டலப்புலியூர் கிராம மக்கள் வசிக்கும் இடத்திலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவிலேயே இருக்கிறது. சர்ச்சைக்கு உள்ளான இந்த ஆசிரமத்தின் செயல்பாடு குறித்து குண்டலப்புலியூர் கிராம மக்களிடமும், அப்பகுதி விவசாயிகளிடமும் விசாரித்தோம். “அந்த ஆசிரமத்தில், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி நலமாக உள்ள ஆதரவற்றோர்களையும்  பிடித்து அடைத்துவிடுவார்கள். அதில், சிலர் எங்கள் ஊர் வழியாகத் தப்பித்து வந்ததுண்டு. 

அவர்களைப் பற்றி விசாரித்துவிட்டு, நாங்களே அவர்களுடைய வீட்டுக்குச் செல்ல உதவியிருக்கிறோம் ஆசிரம உரிமையாளர் ஜூபின்பேபி, அனாதை பிணங்களை அடக்கம் செய்வதாகக் கூறி, எங்கள் கிராமத்தில் 3 பிணங்களை அடக்கம் செய்தார். அதனை ஊர்மக்கள் ஒருமுறை எதிர்த்தோம். அதிலிருந்து அவர் எங்கள் கிராமத்தில் பிணங்களை அடக்கம் செய்வது கிடையாது. மேலும், தங்கள் ஆசிரமத்தில் உள்ளவர்களுக்கு சில சமயம் உணவுக்காக உதவி செய்யும்படி கேட்பார்.

அதன்படி கிராம மக்களும் தங்களிடம் இருக்கும் ரேஷன் அரிசி போன்றவற்றைக் கொடுத்து அனுப்புவார்கள். அந்த ஆசிரமம் பக்கத்தில் உள்ள வயல்வெளி பகுதிக்கு வேலைக்குச் செல்லும் போது சில சமயம் பார்ப்போம்… அந்த ஆசிரமத்தில் உள்ளவர்கள்தான் சமைப்பது முதல் துணி துவைப்பது என அனைத்து வேலைகளையும் செய்துகொள்வார்கள். உதவிக்கென தனியாக ஆட்கள் என்றெல்லாம் யாரும் கிடையாது. சில சமயம் இரவு நேரங்களில் அந்த ஆசிரமத்துக்கு வேன் போன்ற வாகனங்கள் வரும். அதில் பத்துபேர், இருபதுபேர் எனக் கூட்டிச் செல்வார்கள். இப்போது அந்த ஆசிரமத்தைப் பற்றிக் கேள்விப்படும் போது அதிர்ச்சியாக இருக்கிறது” என்றனர்.

ஆசிரம உரிமையாளர் தம்பதி (ஜூபின்பேபி – மரியா)

மேலும், இது குறித்து இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையத்தைச் சேர்ந்த ஆர்வலர் லலிதா என்பவரிடம் பேசினோம். “இந்த ஆசிரமத்துக்கு முறையான அனுமதி பெற இல்லை. கட்டட அனுமதியும் கிடையாது. அதேபோல் இங்கு ஒப்படைக்கப்படும் நபர்கள் மற்றும் குணமாகி வெளியில் செல்லும் நபர்களின் விவரங்களும் அவர்களிடத்தில் கிடையாது. அப்பகுதி காவல் நிலையத்திலும் (கெடார்) இது குறித்த பதிவேடு எதுவும் பின்பற்றப்படவில்லை. 2004-ம் ஆண்டு பாண்டிச்சேரி பகுதிக்கு வந்த ஜூபின்பேபி – மரியா தம்பதி அங்குள்ள ஆசிரமம் ஒன்றில் வேலை செய்து வந்திருக்கின்றனர். 2005-ம் ஆண்டு குண்டலபுலியூர் பகுதியில் 1200 சதுர அடி நிலத்தை வாங்கி அங்கு 13 பேருடன் ஆசிரமத்தைத் துவங்கியிருக்கின்றனர். 

ஆனால், மனநல காப்பகம் என்பது சுமார் 3000 சதுர அடியில் இருக்க வேண்டும். ஒவ்வொரு அறையும் 10×12 அடியில் இருக்க வேண்டும். மனநலம் பாதிக்கப்பட்ட அனைவரும் தரைதளத்தில் தான் தங்க வைக்கப்பட வேண்டும். அவர்களுக்காக மெடிக்கல் கிட் மற்றும் மருத்துவக்குழு இருக்க வேண்டும். அதேபோல மனநலம் பாதிக்கப்பட்ட 8 பேருக்கு ஒரு உதவியாளர் மற்றும் சமூகப் பணியாளர் போன்றோர் இருக்க வேண்டும். ஆனால், இது எதுவுமே அங்குப் பின்பற்றப்படவில்லை. ஆசிரம உதவியாளர்கள் மற்றும் சுமார் 7 பேர் தான் அனைத்து வேலைகளையும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அந்த டிரஸ்ட் வேறொரு பெயரில்தான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தற்போது, செஞ்சி காவல் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் அந்த ஆசிரமத்தில் ஆய்வு மேற்கொண்ட போது சுமார் 123 பேர் மீட்கப்பட்டிருக்கின்றனர். ஆனால், அங்கு 137 பேர் இருந்ததாக ஆசிரம உரிமையாளரின் மனைவி மரியா மூலம் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட மரியா உள்ளிட்ட மூவர்

பெங்களூரு ஆசிரமத்திலிருந்து காணாமல் போனதாகக் கூறப்படுவதில் 14 பேர் இவர்கள்தானோ என்ற சந்தேகம் இதன் மூலமாக எழுகிறது. மேலும், மனநலம் பாதிக்கப்பட்டு ஒப்படைக்கப்படும் நபர்கள் மட்டுமின்றி, ஆதரவற்று சாலையில் நலமாகச் சுற்றித் திரியும் நபர்களையும் பிடித்து அந்த ஆசிரமத்தில் வைத்திருந்திருக்கின்றனர். இவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நலமாக உள்ளதாக 60 – 70 பேர் தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதன் மூலம் உறுதியானதோடு, நலமாக இருந்தவர்களிடத்தில் விசாரித்ததிலும் தெரியவந்தது. இந்த ஆசிரம உரிமையாளருக்குப் பெங்களூரு மட்டுமின்றி தமிழகம், பிற மாநிலங்களைச் சேர்ந்த சில அனுமதி பெற்ற காப்பகங்களுடன் தொடர்பு இருந்திருக்கிறது. 

இவராகவே பிடித்துச் சென்று வைத்திருக்கும் நபர்களைத் தொடர்பில் உள்ள காப்பகங்களுக்கு ட்ரான்ஸ்பர் செய்து, பணம் பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாகத் தெரிய வருகிறது. பெங்களூரு பகுதியில் உள்ள காப்பகத்துக்கு 54 பேரை அனுப்பியதில்,16 பேரைக் காணவில்லை என்று புகார் எழுந்திருக்கிறது. தற்போது கண்டமங்கலம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையிலும் இந்த ஆசிரமத்திலிருந்து அழைத்துச் சென்ற 20 பேர் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. மேலும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை ஒப்படைக்கும் உரிமையாளர்களிடத்திலும் பணம் பெற்றிருக்கிறார். அதேபோல், ரேஷன் அரிசி கடத்தும் நபர்களிடம் தொடர்பு வைத்துக்கொண்டு மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த அரிசியின் மூலமே உணவு சமைத்து வழங்கியிருக்கிறார். 

முதற்கட்டமாக கைது செய்யப்பட்ட நால்வர்

சிகிச்சை என்ற பெயரில் மனநலம் பாதிக்கப்பட்ட சுமார் 20 – 30 பேரைப் புதுவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று, சிகிச்சை அளிக்கும் இவர்…. மருத்துவர் அளிக்கும் மாத்திரை சீட்டினை பெற்று வந்து, பத்துக்கும் மேற்பட்ட மெடிக்கல்கள் மூலமாக அதிக மாத்திரைகளை வாங்கி ஆசிரமத்தில் உள்ள அனைவருக்கும் ஒரே மாதிரியாகக் கொடுத்திருக்கிறார். மாலை வேளையில் மட்டும் ஒரு நபருக்கு சுமார் 7 மாத்திரைகள் வழங்கப்படுமாம். அதைச் சாப்பிட்டதும் அனைவரும் மயங்கி உறங்கிவிடுவார்களாம். அப்போதுதான் பாலியல் சீண்டல்கள், வன்கொடுமைகள் அரங்கேற்றப்பட்டு இருக்கிறது. இப்போது கூட முண்டியம்பாக்கம் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்குத் தினமும் கொடுக்கும்படி, இவர் ஒரு மருத்துவரைப்போலக் கைப்பட மாத்திரைகளை எழுதிக் கொடுத்திருக்கிறார். 

மேலும், மருத்துவமனையிலிருந்து அனாதை பிணங்களைப் பெற்று அண்மை சில வருடங்களாக சுமார் 300 பிணங்களை எரித்து வந்திருக்கிறார். அதில், காணாமல் போனவர்கள் இருப்பார்களோ என்றும், உடலுறுப்பு திருட்டு நடைபெற்றிருக்கலாமா போன்ற சந்தேகங்கள் எழுந்திருக்கிறது. இந்த ஆசிரம உரிமையாளரைத் தாண்டி கெடார் காவல்துறை மற்றும் விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஆகியோரும் தங்களது கடமைகளைச் செய்யத் தவறியிருக்கின்றனர். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு, ஆசிரமம் சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட பிறகு… “தவறுகளைத் திருத்திக் கொள்ளும்படி இந்த ஆசிரமத்துக்கு மெமோ வழங்கியிருப்பதாக” கூறுகிறார். ஆனால், இதற்கு முன்புவரை அந்த ஆசிரமத்தில் மெடிக்கல் கேம்ப் நடத்தி, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான தேசிய அடையாள அட்டையைக் கூட வழங்கவில்லை.

குரங்கினால் பாதிக்கப்பட்டோர்

ஆசிரமத்திலுள்ள நபர்கள் குறித்த விவரங்களை காவல்துறையினர் பராமரிக்காததால், காணாமல் போகும் நபர்கள் குறித்த விவரங்கள் தெரியாமல் போயிருக்கிறது. எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து ஆசிரமங்களும் முறையாக இயங்குகிறதா என்பதை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்யும் வகையில் மருத்துவக் குழு அடங்கிய ஒரு டீம் அமைத்து, அரசு ஆய்வு செய்ய வேண்டும். அது டீம் முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும்” என்றார்.

மேலும், விழுப்புரம் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் ராஜம்மாளிடம் விளக்கம் கேட்டபோது, “ஆசிரமத்துக்கும், எங்களுக்கும் சம்பந்தமே இல்லை. பொதுவெளியில் சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டோர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் ஒப்படைத்துவிடுவோம். மனநல மருத்துவர் அவர்களைப் பரிசோதித்துவிட்டு, அவர்களின் நிலை பொருத்து இது போன்ற ஆசிரமம், காப்பகங்களுக்கு பரிந்துரை செய்வார்கள்” என்றார்

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை

மேலும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலுவிடம் விளக்கம் கேட்டோம். “ஆசிரமத்திலிருந்து 142 பேரை மீட்டிருக்கிறோம். கோட்டக்குப்பம் அருகில் உள்ள மற்றொரு கிளையிலிருந்து 24 பேரை மீட்டிருக்கிறோம். தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு ஆதார் போன்ற அடையாள அட்டைகள் வேண்டும். அந்த ஆசிரம நிர்வாகமும் முன்வர வேண்டும். மேலும், ஆசிரமத்தில் உள்ள குறைகளைச் சொல்கிறோம். அவர்கள் திருத்திக் கொள்ளாத போதுதான் மெமோ கொடுத்திருக்கிறோம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.