
இங்கிலாந்தில் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் திங்கள்கிழமைகளில் அதிக அளவில் விடுமுறை எடுத்த பெண்ணை பணிநீக்கம் செய்தார் உரிமையாளர். இதனை எதிர்த்து அந்தப் பெண் தொடர்ந்த வழக்கில், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியருக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

வட கொரிய அதிபரின் சகோதரி, பசிபிக் பகுதியைத் துப்பாக்கி பயிற்சி தளமாக மாற்ற முடியும் என்று விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களை அந்த நாடு நடத்தியது.

ட்விட்டரைத் தொடர்ந்து ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட மெட்டா நிறுவன செயலிகளில் அங்கீகரிக்கப்பட்ட கணக்குகளுக்கு 11 டாலர் மாதக் கட்டணம் வசூலிக்கத் திட்டமிட்டிருக்கிறது. இதை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் முதலில் நடைமுறைப்படுத்த மேட்டா திட்டம்.

சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ்மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இரண்டு பெண்கள் உட்பட பொதுமக்கள் 15 பேர் கொல்லப்பட்டனர். மேலும் இந்தத் தாக்குதலில் கட்டடங்கள் தரைமட்டமாகின.

டெக்சாஸில், 38 வயது நபர் 3 இளம்பெண்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நியூசிலாந்தைக் கடுமையாகத் தாக்கியிருக்கும் கேப்ரியெல் புயலால் இதுவரை 11 பேர் உயிரிழந்திருப்பதாக அந்த நாட்டின் பிரதமர் அறிவித்திருக்கிறார்.

பிரேசிலில் பெய்துவரும் கனமழையால் கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. வெள்ள பாதிப்புகளில் சிக்கி இதுவரை 24 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

உலக நாடுகளுடன் நட்புறவை மேம்படுத்த `பான்டா டிப்லோமசி’ ப்ரோகிராமின் அங்கமாக ஜப்பானுக்குச் சீனா வழங்கிய பான்டா கரடிகள் மீண்டும் சீனாவிடம் வழங்கப்பட்டன. பான்டாக்களைப் பிரிய மனமில்லாமல் பார்வையாளர்கள் தவித்தனர்.

துருக்கியில் நிலநடுக்கத்தில் இறந்த குழந்தைகளுக்கு இரங்கல் தெரிவிக்கும்வகையில், இடிபாடுகளின்மீது சிவப்பு நிற பலூன்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.

கோலாகலமாக நடந்து முடிந்தது ரியோ டி ஜெனிரோவில் உலகின் பிரமாண்டமான கார்னிவல். கொரோனாவால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த இந்த விழாவில் கண்கவர் அணிவகுப்புகள் இடம்பெற்றிருந்தன.

உக்ரைன் தலைநகர் கீவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடீர் விஜயம் செய்திருக்கிறார். இந்தப் பயணம் குறித்து எந்தவித முன் அறிவிப்பும் தெரிக்கவிக்கப்படவில்லை. பைடன் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டிருக்கிறார். அவருடன் உக்ரைன் அதிபர், அவரின் மனைவி மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.