புதுடெல்லி: மோடியின் தந்தை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். ஒன்றிய பாஜக அரசுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே நாளுக்கு நாள் மோதல் வலுத்து வருகிறது. இந்த ஆண்டு 9 மாநிலங்களில் நடைபெறும் சட்டசபை தேர்தல் மற்றும் அடுத்தாண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலால், இரு கட்சிகளுக்கும் இடையே வார்த்தை போர் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடியின் மறைந்த தந்தை குறித்து, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இவரது கருத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், பவன் கேரா வெளியிட்ட மற்றொரு பதிவில், ‘நாட்டின் முதல் பிரதமரையும், எங்களது முன்னோடிகள் குறித்து நீங்கள் அவமதிக்கும்போது, நார்த் பிளாக்கின் இருக்கும் சாஹிப் (மோடி) குறித்து எதுவும் சொல்லவில்லை. பிரதமரின் தந்தையை நாங்கள் அவமதிக்கவில்லை’ என்று பதிவிட்டுள்ளார். இருந்தும் பிரதமர் மோடியின் மறைந்த தந்தை குறித்து அவமதிப்பு செய்து பேசியதாக கூறி பாஜக தலைவர் முகேஷ் சர்மா என்பவர் ஹஸ்ரத்கஞ்ச் போலீசில் புகார் அளித்தார். அதையடுத்து ஐபிசி 153-ஏ, 500, 504 மற்றும் 505 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் பவன் கேரா மீது போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.