Doctor Vikatan: காலையில் தூங்கி எழுந்ததும் உதடுகள் வீங்கியிருப்பது ஏன்? கண்கள் வீக்கமும் காணப்படுகிறது. இதற்கான காரணம் என்ன?
பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் சஃபி.

காலையில் தூங்கி எழுந்திருக்கும்போது கண்களும் உதடுகளும் வீங்கியிருப்பது என்பது சாதாரணமாக நடக்கக்கூடிய விஷயமில்லை. இப்படி பாதிக்கப்படுகிற நபரின் வயதும், அவருக்கு ஏற்கெனவே ஏதேனும் நோய்கள் இருக்கின்றனவா என்ற விவரமும் தெரிய வேண்டும். வேறு சிகிச்சையில் இருக்கிறார்களா என்பதும் தெரிய வேண்டும்.
கண்களைச் சுற்றியுள்ள வீக்கத்துக்கு உடலில் நீர் கோத்திருப்பது காரணமாக இருக்கலாம். இப்படி இருந்தால் சிறுநீரகச் செயல்பாடு எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டியது அவசியம். இவர்களுக்கு கால்களிலும் கணுக்கால்களிலும் வீக்கம் இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும். இவர்களுக்கு நீரிழிவோ, உயர் ரத்த அழுத்தமோ இருக்கிறதா என்பதையும் பரிசோதனையின் மூலம் உறுதிசெய்துகொள்ள வேண்டியது அவசியம்.
அடுத்து உதடுகளில் ஏற்படும் வீக்கம். உதட்டு வீக்கம் என்பது பெரும்பாலும் ஒவ்வாமை காரணமாகவே ஏற்படும். வீக்கத்துடன் சேர்த்து அரிப்பும், முகத்தில் ஆங்காங்கே திட்டுத்திட்டான வீக்கமும் இருந்தால் அது உணவு அல்லது மருந்துகள் சார்ந்த ஒவ்வாமையின் அறிகுறிகளாக இருக்கலாம். சிலருக்கு சில நேரத்தில் மட்டும் சில உணவுகள் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். எந்த வகை அலர்ஜி, எதனால் ஏற்படும் அலர்ஜி என்பதைக் கண்டறிய இப்போது பிரத்யேக அலர்ஜி பரிசோதனைகள் இருக்கின்றன. மருத்துவரின் ஆலோசனையோடு அவற்றைச் செய்து பார்க்கலாம்.

கண்களைச் சுற்றிய வீக்கத்தில் ஒரு கண்ணைச் சுற்றி மட்டும் வீங்கியிருந்தால் அது அலர்ஜியாக இருக்கலாம். இரண்டு கண்களையும் சுற்றி வீங்கியிருந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
சிலருக்கு ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேத மருந்துகள் ஏற்படுத்தும் ஒவ்வாமையாலும் இப்படி நிகழலாம். எனவே அப்படி ஏதேனும் மருந்துகள் எடுப்பவராக இருந்தால் அவை குறித்து மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது நல்லது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.