நாளை நமோ கிஸான் சம்மான் திவஸ்: நாடு முழுதும் கொண்டாட பா.ஜ., தீவிரம்| BJP is keen to celebrate Namo Kisan Samman Divas across the country tomorrow

விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக நிதியுதவி வழங்கும், பிரதமரின் ‘கிஸான் சம்மான் நிதி யோஜனா’ திட்டம் துவக்கப்பட்டு, நாளையோடு நான்கு ஆண்டுகள் நிறைவடைவதை, நாடு முழுதும் கொண்டாட பா.ஜ., திட்டமிட்டுள்ளது.

நிதியுதவி

விவசாயிகளின் நலனுக்காக, அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக, நிதியுதவி வழங்க திட்டமிடப்பட்டது. இதற்காக, 2019 பிப்ரவரி 24ம் தேதி, உத்தர பிரதேசத்தின் கோரக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, இத்திட்டத்தை துவக்கி வைத்தார்.

இதன் வாயிலாக, ஆண்டுதோறும் 6,000 ரூபாய், மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 11 கோடி விவசாயிகள் பயன் பெறும் இத்திட்டம், நான்கு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இது துவக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், இதைக் கொண்டாட விரிவான ஏற்பாடுகளை செய்யும்படி, பா.ஜ., தலைமை உத்தரவிட்டுள்ளது.

கனவுத் திட்டம்

இதுகுறித்து, பா.ஜ.,வின் விவசாய பிரிவான கிஸான் மோர்ச்சா அமைப்பின் தேசிய நிர்வாகி மனோஜ் கூறியதாவது:

பிரதமரின் கனவுத் திட்டங்களில் முக்கியமானதும், விவசாயிகளின் நலன் காப்பதுமான இத்திட்டத்தை, நாளை வெகு விமரிசையாக கொண்டாட முடிவு செய்துள்ளோம்.

கிஸான் மோர்ச்சாவின் தலைவரும், எம்.பி., யுமான ராஜ்குமார் சகார் தலைமையில், ‘நமோ கிஸான் சம்மான் திவஸ்’ என்ற பெயரில், அதாவது, விவசாயிகள் மரியாதை தினமாக கொண்டாடவிருக்கிறோம். அன்றைய தினம், பா.ஜ., தலைவர்களும், தொண்டர்களும் விவசாயிகளை நேரடியாக சந்தித்து உரையாடுவர். இத்திட்டத்தை பெறுவதில் சிரமங்கள் உள்ளனவா, இதை இன்னும் மேம்படுத்துவது எப்படி என்பது போன்ற விபரங்களை அவர்களிடம் கேட்டறிவர். இவ்வாறு அவர் கூறினார்.

– நமது டில்லி நிருபர் –

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.