இந்திய அரசியலின் புதிய தொடக்கம் இந்த பொதுக்கூட்டம்; முக ஸ்டாலின் தெறி பேச்சு.!

முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று நடைபெற்ற பிறந்தநாள் பொதுகூட்டத்தில் பேசும்போது, ‘‘நான் என்றும் உங்களில் ஒருவன் தான். ஸ்டாலின் என்ற பெயருக்குள் கோடிக்கணக்கான உடன்பிறப்புக்களின் உயிர் அடங்கியுள்ளது. பெரியார், அண்ணா, கலைஞரின் வழித்தடத்தில் வந்த நான் வீட்டுக்கு விளக்காக இருப்பேன், நாட்டிற்கு தொண்டனாக இருப்பேன், மக்களுக்காக கவலைப்படும் தலைவனாக இருப்பேன், மக்கள் பிரச்சனைகளை தீர்க்கும் முதல்வனாக இருப்பேன்.

திருமணமான ஐந்தே மாதத்தில் சிறைக்குச் சென்றேன். பொதுவாழ்க்கையில் இது சாதாரணம் தான் என்று என்னை வழியனுப்பியவர் கலைஞர். அந்த சிறைவாசம் தான் அரசியலில் எனது பாசறையாக அமைந்தது. சிறைச்சாலை அனுபவத்தில் கொள்கைக்காக வாழ்நாள் முழுவதும் உழைக்க உறுதி ஏற்றுக் கொண்டேன். இந்த 55 ஆண்டுகால அரசியலில் எனது கால்படாத கிராமம், நகரம், மாநகரம் இல்லை.

எனக்கு 70 வயது ஆகிவிட்டது என்பதை என்னாலயே நம்ப முடியவில்லை. நினைத்து பார்த்தால் எல்லாம் நேற்று நடந்தது போல் தோன்றும். ஆனால் என்னுடையது நெடும்பயணம். மார்ச் 1 பிறந்தநாள் என்று சொல்லும் போது தான், என்னுடைய வயது நியாபகம் வருகிறது. உங்களது மனதில் கொள்கை உறுதியும், அதை நிறைவேற்றுவதில் லட்சியத் தாகமும் இருந்தால், அந்த லட்சயத்திற்கு உழைப்பதும் உங்கள் அன்றாட பணியாக இருந்தால் உங்களுக்கு வயதே ஆகாது. லட்சியவாதிகளுக்கு என்றும் வயதாவது இல்லை.

அண்ணா அவர்கள் உருவாக்கிய தமிழகத்தை, கலைஞர் அவர்கள் காட்டி காத்த தமிழகத்தில் நிரந்தரமாக ஆட்சி பொறுப்பில் வைத்திருப்பேன். நான் முதல்வராக இருக்க வேண்டும் என்ற ஆசையில் சொல்லவில்லை. திராவிட சித்தாந்தத்தை காக்க வேண்டும் என்ற நமது லட்சியத்திற்காக. இதை உங்கள் முன் உறுதி ஏற்கிறேன். திராவிட அரசியல் நெறிமுறைகளின் படி தமிழ்நாட்டை கல்வி, வளர்ச்சி, சமூக மேம்பாடு, சமூக நீதி ஆகியவற்றில் முன்னேற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.

கொள்கையை பரப்ப கட்சி, கொள்கையை நிறைவேற்ற ஆட்சி. இந்த இரண்டின் வழியாக தமிழ்நாட்டை என்றும் தலை நிமிரவைப்போம். தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகளை அளித்தோம். அதில் 85 சதவிகிதத்தை நிறைவேற்றி விட்டோம். மீதமுள்ளவை இன்னும் ஓராண்டுக்குள் நிறைவேற்றப்படும். தேர்தல் அறிக்கையில் சொல்லப்படாதவையும் நிறைவேற்றியுள்ளோம். தமிழ்நாடு எல்லையைத் தாண்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது நமது திராவிட மாடல் ஆட்சி.

என்னுடைய சீனியர்களும், ஜூனியர்களும் என்னை வாழ்த்த இங்கு வந்துள்ளனர். இது என்னுடைய பிறந்தநாள் விழாவாக மட்டுமில்லாமல், இந்தியாவில் புதிய அரசியலுக்கான தொடக்கவிழாக இந்த விழா அமைந்திருக்கிறது. ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுக்காக ஒருமித்த கருத்துகளுடைய அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து பணியாற்ற தயார். 2024 தேர்தல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை யார் ஆட்சியில் இருக்க கூடாது என்பதை தீர்மானிக்க உள்ளது.

ஒன்றுபட்ட இந்தியாவை, சாதி மற்றும் மத ரீதியாக பிளவுபடுத்தும் பாசிச பாஜகவை ஆட்சியில் இருந்து நீக்க வேண்டும். பாஜகவை எதிர்க்க அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்று சேர வேண்டும். ஒற்றுமை வந்துவிட்டாலே வெற்றி நிச்சயம். மாநிலங்களுக்குள் இருக்கும் அரசியல் வேறுபாட்டை வைத்து தேசிய அரசியலை தீர்மானித்தால், இழப்பு நமக்கு தான் என்பதை அனைத்து கட்சிகளும் உணரவேண்டும். தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த அனைத்து தேர்தலிலும் வெற்றி பெற்றிருக்கிறோம் என்றால் அதற்கு இந்த ஒற்றுமை காரணம்.

முதல்வர் ஸ்டாலினுக்கு Birthday Gift-ஆக ஒட்டகம்!

அரசியல் கட்சிகள் தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை கடந்து பாஜக வீழ்த்த ஒன்றுபட வேண்டும். அதேபோல் காங்கிரஸ் இல்லாத கூட்டணி என்பதை நிராகரிக்க வேண்டும். தேர்தலுக்கு பிறகு கூட்டணி வைத்து கொள்கிறோம் என்பதும் நடைமுறைக்கு ஒத்து வராது. ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்துவிட்டு, 4 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு செங்கலுக்கு மேல் கொடுக்காமல் தமிழ்நாட்டை அவமானப்படுத்தி வருகிறது ஒன்றிய பாஜக அரசு.

நீட் உள்ளிட்ட விவகாரங்களில் தனிப்பட்ட ஸ்டாலினை அவமானப்படுத்துவதாக நினைத்து கொண்டு, 8 கோடி தமிழ் மக்களை ஒன்றிய பாஜக அரசு அவமானப்படுத்தி வருகிறது’’ என முதலமைச்சர் முக ஸ்டாலின் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.