சேலம்: கோடை வெயிலின் தாக்கத்தை போக்கும் விதமாக சேலத்தில் போக்குவரத்து போலீஸாருக்கு சோலார் தொப்பியை மாநகர காவல் துணை ஆணையர்கள் மாடசாமி, லாவண்யா வழங்கினர்.
தமிழகத்தில் குளிர்காலம் நிறைவு பெற்று, தற்போது கோடை காலம் ஆரம்பித்துள்ளது. கோடையின் முதல் வாரத்திலேயே வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளதால், வியர்வை பொங்கிட மக்கள் வெளியிடங்களுக்கு செல்லும் நிலைக்கு உள்ளாகியுள்ளனர். மிகுதியான வெயில் தாக்கத்திலும், சாலைகளில் நின்று போக்குவரத்து போலீஸார் பணியாற்றி வருகின்றனர். போலீஸார் வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ளும் விதமாகவும், உஷ்ண சீதோஷண நிலையால் உடல் பாதுகாப்பை பேணி காத்து, எவ்வித சிரமமின்றி இடையூறில்லாமல் பணியாற்றும் விதமாக, சேலம் மாநகர காவல்துறை சார்பில் போக்குவரத்து போலீஸாருக்கு சோலார் தொப்பி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாநகர காவல் துணை ஆணையர்கள் மாடசாமி மற்றும் லாவண்யா கலந்து கொண்டு போக்குவரத்து போலீஸாருக்கு சோலார் தொப்பிகளை வழங்கினர்.
தொடர்ந்து வெயிலில் நின்று பணியாற்றும் போக்குவரத்து போலீஸாருக்கு தாகம் தீர்க்கும் வகையில், நீர்மோர் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாநகர காவல் ஆணையர்கள் மாடசாமி, லாவண்யா உள்ளிட்டோர் போக்குவரத்து காவலர்களின் குறைகளை தனித்தனி மனு மூலமாக பெற்று, மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
சேலம் மாநகரத்தில் தினமும் 110 போக்குவரத்து போலீஸார் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ள தொடர்ந்து நான்கு மாதங்களுக்கு லெமன், மோர் வழங்க மாநகர காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.