லண்டன்: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்தாண்டு செப்டம்பரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, தேசிய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார். இந்த யாத்திரை காஷ்மீரில் கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்தது.
இந்த 5 மாத காலத்தில் வெள்ளைநிற டி-சர்ட்டுடன் நடை பயணம்மேற்கொண்ட ராகுல் காந்தி தனது தாடியை ஷேவ் செய்யவில்லை. தாடி வளர்ப்பது குறித்து ராகுலிடமே கேள்வி எழுப்பப்பட்டது.
யாத்திரைக்காக அவர் தாடி வளர்த்தார் என்றும், யாத்திரை முடிந்துவிட்டதால் தாடியை எடுப்பது குறித்து ராகுல் முடிவு செய்வார் என காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் இடையே உரையாற்ற ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்காக முடிவெட்டி, தாடியை டிரிம் செய்து, கோட் சூட் அணிந்து லண்டன் சென்றுள்ளார் ராகுல் காந்தி. இந்த போட்டோவை காங்கிரஸ் தலைவர்கள் பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர்.
‘ 21-ம் நாற்றாண்டில் கேட்பதற்காக கற்றுக்கொள்வது’ என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார். இதில் தேசிய ஒற்றுமை யாத்திரையின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இந்தியா – சீனா உறவுகள் உட்பட பல தலைப்புகளில் கேம்பிரிட்ஜ் பல்கலை.யில் நடைபெறும் கூட்டங்களிலும் அவர் கலந்து கொள்கிறார். லண்டனில் உள்ள கட்சி பிரதிநிதிகள் ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்கம் ஆகியவற்றிலும் ராகுல் உரையாற்றுகிறார்.