திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான சிதிலமடைந்த சர்க்கரை குளத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க தமிழ்நாடு அரசு 45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகம் சாலையில் சர்க்கரை குளம் உள்ளது. இந்த குளமானது ஆண்டாள் கோயிலுக்குச் சொந்தமானது. பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய மிகப் பழமையும் பெருமையும் வாய்ந்த குளமாகும். சர்க்கரை குளத்தை பல்வேறு கலை நயமிக்க வேலைபாடுகளுடன் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அமைத்திருந்தனர். ஆனால் காலப்போக்கில் முறையான பராமரிப்பு இன்றி இந்தக் குளம் சிதலமடையும் சூழலுக்கு வந்தது. சர்க்கரை குளத்தின் சுற்றுப்புற சுவர்கள் இடிந்து பெயர்ந்துள்ளது. அதே போல குளத்தைச் சுற்றி செடி கொடிகள் முளைத்து புதர் போல் காட்சியளித்தது.
தண்ணீரை சேமிக்க முடியாமல் குளத்தில் தேங்கியிருக்கும் சிறிதளவு தண்ணீரும் பாசி படர்ந்து மோசமான நிலையில் காணப்படுகிறது. இந்நிலையில் ஆண்டாள் கோயில் குளத்தை சீரமைக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்தது. அந்தவகையில் தமிழ்நாட்டில் திமுக அரசு அமைந்த உடன் தமிழகத்தில் உள்ள பல்வேறு முக்கிய கோயில்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறாத கோயில்களில் கூட வெகு விமர்சையாக கும்பாபிஷேகங்களை நடத்தி முடித்துள்ளனர். மேலும் பல்வேறு புகழ்பெற்ற தொன்மை வாய்ந்த சிதலமடைந்த கோயில் குளங்களையும் பழமை மாறாமல் சீரமைப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.
அந்த வகையில் திருவில்லிப்புத்தூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான சர்க்கரை குளத்தையும் புதுப்பிக்க தமிழ்நாடு அரசு 45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் விரைவில் சர்க்கரை குளம் தூர்வரப்பட உள்ளது. மேலும் குளத்தைச் சுற்றி உள்ள குளத்தில் சிதிலமடைந்து உள்ள சுற்றுச்சுவரை பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும். மேலும் குளத்தில் அமைந்துள்ள படிக்கட்டுகளை சீரமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல் தெப்பத்தை சுற்றி 5 அடி அகலத்தில் நடைமேடை அமைக்கப்பட்டு, துருப்பிடிக்காத சில்வர் கைப்பிடிகள் குளத்தில் வைக்கப்பட உள்ளது. தெப்பத்தை சுற்றிலும் இரவில் ஜொலிக்க கூடிய வகையில் அலங்கார விளக்குகள் அமைக்கப்பட உள்ளது. மேலும் குளத்தின் நடுவில் நீராவி மண்டபமும் அமைக்கப்பட உள்ளது.
இவை அனைத்தும் பழமை மாறாமல் அதே தன்மையுடன் அமைக்கப்பட உள்ளது என்பந்து கூடுதல் தகவல். மேலும் இந்த திட்டத்தின் சிறப்பு அம்சம் என்பது குளத்தைச் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதி வீடுகளில் வரும் மழை நீரை அப்படியே சேகரித்து, இந்த குளத்தில் மழை நீரை சேகரிக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது. மொத்தத்தில் மழை நீர் சேமிக்கும் இடமாகவும் குளம் மாற்றப்பட உள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கையால் திருவில்லிபுத்தூர் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இது குறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘‘திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான சர்க்கரை குளத்தை சீரமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்து வந்தது. இதனை நிறைவேற்று வகையில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான பணிகள் விரைவில் துவங்கும் பணிகள் துவங்கி சுமார் 4 மாதத்தில் நிறைவடையும்’’ என்றார்.