சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தலைவர் 170’ படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘அண்ணாத்தே’ படத்தைத் தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’. கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால், தமன்னா, யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, கடலூர், ராஜஸ்தான் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்தது. இந்த மாதத்துடன் இந்தப் படத்தின் படப்பிடிப்புகளை முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
‘ஜெயிலர்’ படத்தை அடுத்து லைகா தயாரிப்பில் 2 படங்கள் நடிக்க ரஜினிகாந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் ‘தலைவர் 170’ படத்தை ‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்க உள்ளதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில், லைகா குழுமத் தலைவர் சுபாஸ்கரனின் பிறந்த நாளை முன்னிட்டு ‘தலைவர் 170’ படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே வெளியான தகவலின்படி‘தலைவர் 170’ படத்தை த.செ. ஞானவேல் இயக்குவதை லைகா நிறுவனம் ட்விட்டர் வாயிலாக உறுதி செய்துள்ளது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். 2024-ம் ஆண்டு இந்தப் படம் திரைக்கு வரவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
We are feeling honoured to announce our next association with “Superstar” @rajinikanth for #Thalaivar170
Directed by critically acclaimed @tjgnan Music by the sensational “Rockstar” @anirudhofficial
@gkmtamilkumaran
@LycaProductions #Subaskaran#தலைவர்170 pic.twitter.com/DYg3aSeAi5— Lyca Productions (@LycaProductions) March 2, 2023
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏற்கனவே ‘2.0’, ‘தர்பார்’ உள்ளிட்டப் படங்களில் நடித்துள்ள ரஜினிகாந்த் மூன்றாவது முறையாக இந்தப் படத்தின் வாயிலாக இணைகிறார். மேலும், ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், லைகா தயாரிப்பில் இயக்கவுள்ள ‘லால் சலாம்’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.