டெல்லியில் தொழிலதிபர் மனைவியை மிரட்டி ரூ. 200 கோடி பறித்த வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சுகேஷ் சந்திரசேகர் பாலிவுட் நடிகைகள் பலருடன் தொடர்பு வைத்திருந்தான். மிரட்டி சம்பாதித்த பணத்தை டெல்லி திகார் சிறையில் இருந்து கொண்டே தண்ணீராக செலவு செய்தான். சிறைக்கே பாலிவுட், டிவி நடிகைகளை அழைத்து வரவைத்தான்.
சிறைக்கு வரும் நடிகைகளுக்கு லட்சக்கணக்கில் பணம், பரிசுகளை வாரி வழங்கினான். சுகேஷ் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா பஹேகி உட்பட சில நடிகைகளுக்கு கோடிக்கணக்கில் பணம், பரிசு வழங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்தது.

சுகேஷ் பரோலில் வெளியில் வந்த போது ஜாக்குலின் பெர்னாண்டஸை மட்டும் சென்னைக்கு தனி விமானத்தில் வரவழைத்து பேசினான். அதோடு 10 கோடிக்கும் அதிகமான பணம், பரிசுப்பொருள்களை வழங்கி இருந்தான் என்பது அமலாக்கப்பிரிவின் விசாரணையில் தெரியவந்தது. அமலாக்கப்பிரிவு அந்த பரிசுப்பொருள்களை ஜாக்குலினிடமிருந்து பறிமுதல் செய்துவிட்டனர். சுகேஷ் இப்போது வேறு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளான். ஆனாலும் சுகேஷ் அடிக்கடி ஜாக்குலின் பெர்னாண்டஸிற்கு ஆதரவாக கடிதம் எழுதி வருகிறான்.
தற்போதும் ஹோலி பண்டிகைக்காக ஜாக்குலினுக்கு வாழ்த்து சொல்லி சுகேஷ் கடிதம் எழுதியிருக்கிறான். அக்கடிதம் தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் சுகேஷ், “மிகவும் அற்புதமான, அழகான என் ஜாக்குலின் பெர்னாண்டஸிற்கு ஹோலி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நாளில் உனக்கு வாக்களிக்கிறேன். நீ உன் நிறத்தை அல்லது அடையாளத்தை இழந்திருந்தால் அதனை 100 மடங்காக உனக்கு கொண்டு வருவேன். இது என் பொறுப்பு. உனக்காக நான் எந்த எல்லைக்கும் செல்வேன். ஐ லவ் யு பேபி. சிரித்துக்கொண்டே இரு.

என்னை எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்றும் தெரியும். லவ் யூ இளவரசி. உன்னை அதிகமாக மிஸ் செய்கிறேன் என் அன்பே” என்று குறிப்பிட்டிருக்கிறார். இதற்கு முன்பு ஜாக்குலினுக்கு காதலர் தின வாழ்த்துக்களையும் சுகேஷ் தெரிவித்திருந்தான். கடந்த மாதம் அமலாக்கப்பிரிவு சுகேஷ் மீது மேலும் ஒரு பணமோசடி வழக்கு பதிவுசெய்தனர். ஏற்கெனவே இரண்டு வழக்குகள் சுகேஷ் மீது இருக்கிறது. டிடிவி தினகரனுக்கு தேர்தல் கமிஷனில் இரட்டை இலை சின்னத்தை வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்தது, தொழிலதிபர் சிவிந்தர் சிங் மனைவி அதிதி சிங்கிடம் ரூ.200 கோடி வாங்கியது தொடர்பாக இரண்டு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. புதிதாக தொழிலதிபர் மல்விந்தர் சிங் மனைவி ஜப்னா சிங்கிடம் ரூ.4 கோடி பறித்தது தொடர்பாகவும் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.