பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சென்னை டிபிஐ வளாகத்தில் நேற்று பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதி நேர ஆசிரியர்கள் கடந்த 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்யப்படுகின்றனர். இதன்படி தமிழகத்தில் தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். அதற்கு ரூபாய் 10 ஆயிரம் மாத சம்பளமாக வழங்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக பணி புரியும் அவர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகின்றனர். இதைத்தொடர்ந்து நேற்று தமிழ்நாடு பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் சங்கம் சார்பில் மாநில தலைவர் கீதா தலைமையில் 300க்கும் மேற்பட்டோர், சென்னை டிபிஐ வளாகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் திமுக தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தவாறு பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.