மகளிர் தினத்தை முன்னிட்டு கோவையில் நடந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். அப்போது அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறுகையில், “என்னுடைய பேருக்கு பிறகு எம்.பி, எம்.எல்.ஏ என போட்டுக் கொள்வதற்காக நான் இங்கு வரவில்லை. பாஜக வளர வேண்டும் என்பதுதான் என்னுடைய இலக்கு. இன்னொரு கட்சியின் பலவீனத்தை பயன்படுத்தி பாஜக வளரக் கூடாது.

அப்படி வளர்ந்தாலும் கூட அது தொடராது. பாஜக தமிழகத்தில் தனக்குரிய இடத்தை கண்டுபிடித்து, தமிழக மக்களின் அன்பைப் பெற்று அது வளர வேண்டும். நான் மதுரை, சென்னை இடங்களில் என்னுடைய கருத்தாக, என்ன பேசி இருக்கின்றேனோ அதுதான் என்னுடைய கருத்து. அதிலிருந்து ஒரு படி மேலும் கிடையாது. கீழும் கிடையாது. என்னுடைய கருத்தில் உறுதியாக இருக்கிறேன்.
வேறு வேறு கட்சியில் இருக்கக்கூடிய தலைவர்கள், ஏற்கெனவே ஒரு வளர்ந்த கட்சியில் இணைந்து தலைவர்களாக இருக்கிறார்கள். ஆனால் பாஜக தொண்டன் அவ்வாறு இல்லை. யாரும் போகாத பாதையில் போய்க் கொண்டிருக்கிறார்கள். எங்களை யாருடனும் ஒப்பிட வேண்டாம். நான் இப்படித்தான் இருப்பேன். நான் இருக்கும்வரை கட்சியும் இப்படித்தான் இருக்கும்.

கட்சியில் சில மாற்றங்கள் செய்தால் தான் ஆட்சிக்கு வர முடியும். அதற்கு உழைக்க வேண்டும். ரத்தம் வரத்தான் செய்யும். அவ சொற்களை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும். அவமானங்களை சந்திக்க வேண்டும். தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் வளர்ந்த விதம் வேறு. பாஜக வளர்ந்து வரும் விதம் வேறு.
அரசியல் கட்சியில் சிலவற்றில் மேனேஜர்கள் உள்ளார்கள். சில கட்சிகளில் தலைவர்கள் இருக்கிறார்கள். தலைவர்கள் ஒரு முடிவை எடுக்கும்போது துணிந்து எடுக்க வேண்டும். தவறு நடந்தாலும் எதிர்த்து நிற்க வேண்டும். ஜெயலலிதா அம்மையாருக்கு டெபாசிட் போன பிறகும், துணிந்து நின்று வென்றார்கள். ஒரு தலைவர் இப்படித்தான் நிற்பார்கள்.

நானும் அப்படிப்பட்ட பாதையில் தான் பயணித்துக் கொண்டிருக்கிறேன் என கூறியிருந்தேன். என்னைப் பொறுத்தவரை என் தாயார், ஜெயலலிதா அம்மையாரை விட 100 மடங்கு சக்தி வாய்ந்தவர்கள். என்னுடைய மனைவி ஜெயலலிதா அம்மையாரை விட 1,000 மடங்கு சக்தி வாய்ந்தவர். இது ஒப்பீடு கிடையாது.
கட்சியில் இணைவது, செல்வது எல்லாம் சகஜம். பாஜகவில் இரண்டாம் மூன்றாம், நான்காம் கட்டத்தில் இருக்கக்கூடிய நிர்வாகிகள் செல்வதெல்லாம் பெரிய செய்தியாக வருகிறது என்றால் உண்மையாகவே பாஜகவை சீரியஸாக எடுத்திருக்கிறார்கள் என்று தான் அர்த்தம். தற்போது திமுகவில் இருக்கக்கூடிய பாதி அமைச்சர்கள் அதிமுகவில் இருந்து வந்தவர்கள்.

பாஜகவில் இருந்து செல்லும் அனைவரும் நன்றாக இருங்கள். போகின்ற இடத்தில் விசுவாசமாக இருங்கள். இன்னும் ஆறு மாதத்தில் பெரிய பெரிய தலைகள் செல்வதற்கும் வாய்ப்பிருக்கிறது. அதேபோல பெரிய பெரிய தலைகள் வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.” என்றார்.