ஹைதராபாத் :தெலுங்கானாவில் கூடுதல் வரதட்சணை கேட்டு, திருமணத்தை மணமகள் நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானாவில் ஹைதராபாத் அருகேயுள்ள பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும், அஸ்வராபேட்டையைச் சேர்ந்த பெண்ணிற்கும் நேற்று முன் தினம் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இவர்கள் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
இதற்கான ஏற்பாடுகள் இருவீட்டார் சார்பில் மேற்கொள்ளப்பட்டது. பழங்குடியின வழக்கத்தின்படி, தங்கள் வீட்டிற்கு வரும் மருமகளுக்கு, மணமகன் வீட்டார் வரதட்சணை அளிப்பர்.
இதன்படி மணமகளுக்கு, மணமகன் வீட்டார், 2 லட்சம் ரூபாய் வரதட்சணையாக அளித்தனர்.
திருமண நிகழ்வின் போது, மணமகன் மணமேடைக்கு வந்த நிலையில், பெண் வீட்டார் யாரும் வராததால் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து மணமகள் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்குச் சென்ற மணமகன் தரப்பினர், மண்டபத்திற்கு வரும்படி அழைத்தனர். எனினும், கூடுதல் வரதட்சணை அளித்தால் மட்டுமே வர முடியும் என மணமகள் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகன் வீட்டார், போலீசில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சமரசம் செய்ய முயற்சித்தனர்.
எனினும், மணப்பெண் பிடிவாதமாக இருந்ததால், திருமணத்தை நிறுத்த இருதரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
இதனால், மணமகன் வீட்டார் அளித்த, 2 லட்சம் ரூபாயையும், மணப்பெண் வீட்டார் திருப்பி அளித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்