பாஜக அண்ணாமலை ஒரு கத்துகுட்டி: காட்டமாக விமர்சித்த கடம்பூர் ராஜு

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மைக்கை கண்டால் எதை வேண்டுமானாலும் பேசி விடுவார். அவருக்கு அது ஒரு வியாதி என்று விளாத்திகுளம் அருகே நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசினார்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் தற்போதைய கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

கோவில்பட்டி எம்எல்ஏ கடம்பூர் ராஜு பேசுகையில், “சட்டப் பேரவையில் அம்மாவின் சிங்கப் பார்வைக்கு அமைதியாக இருந்தவர்கள் காலம் எல்லாம் உண்டு. கேவலம் அண்ணாமலை அரசியலுக்கு ஒரு கத்துக்குட்டி.

உங்கள் வீட்டம்மாவை புகழ்ந்து பேசினால் தான் வீட்டில் சோறு கிடைக்கும் என்றால் புகழ்ந்து பேசுங்கள். அதற்கு நாங்கள் இடைஞ்சலாக இல்லை. ஆனால் புரட்சித்தலைவி அம்மாவை ஒப்பிட்டுப் பேசக்கூடாது. அம்மாவுக்கு நிகர் அம்மா தான்.

தமிழனுடைய உரிமையை பெருமையை டெல்லியில் நிலைநாட்டிய பெருமை புரட்சித்தலைவி அம்மாவையே சாரும்.

அதிமுகவில் இருந்து விலகி பாஜகவிற்கு சென்று எம்.எல்.ஏ ஆகியுள்ளார் நயினார் நாகேந்திரன். அதற்காக நாங்கள் என்ன அவரிடம் சண்டையா போட்டோம், அவர்களிடம் என்ன பஞ்சாயத்தா வைத்தோம்? ஒற்றை தலைமை என்று அன்றைக்கு இந்த நிலைமை வந்திருந்தால் நயினார் நாகேந்திரன் பாஜகவிற்கு சென்று இருக்க மாட்டார்.

ஐபிஎஸ் முடித்துவிட்டு பதவி மாற்றத்திற்காக அரசியலுக்கு வந்தவர் அண்ணாமலை. ஆட்சி மாற்றம் வந்தால் திரும்பவும் ஐபிஎஸ் வேலைக்கு தான் செல்ல வேண்டும்.

அரசியல்வாதி பேச்சை அளந்து பேச வேண்டும். மைக்கை கண்டால் எதை வேண்டுமானாலும் பேசி விடுவார். அண்ணாமலைக்கு அது ஒரு வியாதி. செய்தி தொலைக்காட்சிகள் அண்ணாமலை பேச்சை கேட்டால் சேனலை மாற்றக்கூடிய அளவிற்கு மக்கள் வந்து விட்டார்கள்.

புரட்சித்தலைவி ஜெயலலிதாவை பற்றி பேசியவர்களுக்கு அழிவு ஆரம்பம். அதிமுகவை உரசி பார்த்தால் தீ குழம்பாக எரியும் என்று எச்சரிக்கிறேன்” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.