புதுடில்லி, உலகின் மிகவும் மாசடைந்த 50 நகரங்களில், 39 நகரங்கள் இந்தியாவில் இருப்பது ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
உலகின் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆய்வு செய்யும், ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த, ஐ.க்யூ.ஏர்., என்ற நிறுவனம், உலக காற்று மாசின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில், உலகின் மிகவும் மாசடைந்த 50 நகரங்களில், 39 நகரங்கள் இந்தியாவில் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுடில்லி, குருகிராம், நொய்டா, காசியாபாத், பரிதாபாத், ஆக்ரா உள்ளிட்ட நகரங்கள் மிகவும் மாசடைந்த நகரங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இந்த ஆய்வு, 131 நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
உலகளவில், மிகவும் மாசடைந்த டாப் – 10 நாடுகள் பட்டியலில், மத்திய ஆப்ரிக்க நாடான சாட் முதலிடத்திலும், மேற்காசிய நாடான ஈராக் இரண்டாம் இடத்திலும், நம் அண்டை நாடான பாகிஸ்தான் மூன்றாம் இடத்திலும் உள்ளன. கடந்த 2022ல், இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது, எட்டாவது இடத்திற்கு சென்றுள்ளது.
இதே போல், உலகளவில் மிகவும் மாசடைந்த தலைநகரங்கள் பட்டியலில், சாட் நாட்டின் என்.டிஜமனோ முதலிடத்திலும், இந்தியாவின் தலைநகர் புதுடில்லி, இரண்டாம் இடத்திலும் உள்ளன. மெட்ரோ நகரங்களில், புதுடில்லிக்கு அடுத்தபடியாக கோல்கட்டா அதிகம் மாசுபட்டுள்ளது. இதில், சென்னை ஒப்பீட்டளவில் துாய்மையாக உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement