மும்பையில் அதிர்ச்சி; தாயாரின் உடலுடன் 3 மாதங்களாக வாழ்ந்த மகள்

மும்பை,

மராட்டியத்தின் மும்பை நகரில் லால்பாக் நாகா பகுதியில் இப்ராகிம் கசம் சாவல் என்ற இடத்தில் வசித்து வந்தவர் வீணா (வயது 54). இவரது ஒரே மகள் ரிம்பிள் பிரகாஷ் ஜெயின் (வயது 22).

இந்நிலையில், ரிம்பிள் தனது தாயாரை கொலை செய்து அவரது உடலை பல பாகங்களாக துண்டுகளாக்கி குடியிருக்கும் தனது பிளாட்டில் தனித்தனியாக மறைத்து வைத்து உள்ளார்.

அந்த உடல் பாகங்களில் இருந்து துர்நாற்றம் எதுவும் பரவாமல் தடுப்பதற்காக 200-க்கும் மேற்பட்ட நறுமண பாட்டில்களை வாங்கி தெளித்து, அவற்றை மறைக்க முயற்சித்து உள்ளார்.

அதனுடன் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் பேசுவது உள்ளிட்ட விசயங்களை குறைத்து கொண்டார். வீட்டின் ஜன்னல் பகுதியில் அமர்ந்து கொண்டு சாலையில் செல்லும் வாகனங்களை வெறித்து, பார்த்தபடி இருந்து உள்ளார்.

அவரிடம் சென்று பக்கத்து வீட்டுக்காரர்கள் வீணா எங்கே? என்று கேட்டால், கான்பூர் நகருக்கு சுற்றுலா ஒன்றுக்கு போயிருக்கிறார் என்ற பொய்யான தகவலை திரும்ப, திரும்ப கூறி வந்திருக்கிறார்.

இந்நிலையில், ரிம்பிளின் உறவுக்கார பெண் ஒருவர், பணம் தருவதற்காக ரிம்பிளை சந்திக்க சென்று உள்ளார். அவருக்கும் வீணா எங்கே? என்பதற்கு கான்பூருக்கு சென்றுள்ளார் என பதில் வந்து உள்ளது.

இதனால் சந்தேகமடைந்த அந்த பெண் தனது தாயார் மற்றும் மற்றொரு உறவினரை அழைத்து உள்ளார். அப்போதும் ரிம்பிள் கதவை திறக்க மறுத்து விட்டார்.

இதனால், ரிம்பிளின் அத்தை தனது மகனை மொபைல் போனில் அழைத்து உள்ளார். இதன்பின்னரே அவர் வந்து, கதவை தள்ளி உள்ளே சென்று உள்ளார். துர்நாற்றம் வந்தபோதும், உள்ளே யாரும் இல்லை.

சந்தேகத்துடன் ரிம்பிளையும், உறவினர்களையும், வீணாவின் மூத்த சகோதரர் சுரேஷ் குமார் பொர்வால் என்பவரையும் அழைத்து கொண்டு காவல் நிலையத்திற்கு சென்றனர். விவரம் அறிந்து போலீசார் சம்பவ பகுதியில் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்கள் இரும்பு அலமாரி ஒன்றிற்குள் திறந்து பார்த்தபோது, துர்நாற்றம் அதிகரித்து இருந்தது. அதில், பிளாஸ்டிக் பை இருந்தது. அதில் அழுகிய நிலையில் உடல் பகுதி இருந்து உள்ளது.

தொடர்ந்து நடந்த சோதனையில், சிறிய தொட்டியில் கைகளும், கால்களும் கிடந்து உள்ளன. உடனடியாக ரிம்பிளை விசாரணைக்கு அழைத்து சென்றனர். வீட்டில் இருந்து கொலை செய்ய பயன்படுத்திய உபகரணங்களை போலீசார் கைப்பற்றினர்.

வீணாவை கடைசியாக கடந்த டிசம்பர் இறுதியில் பக்கத்தில் வசிப்பவர்கள் பார்த்து உள்ளனர். அப்போது வெளியே சென்று விட்டு திரும்பிய அவர் கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டு உள்ளது. அதன்பின்னர், அவரை வெளியே காணவில்லை என கூறப்படுகிறது.

இதுபற்றி மும்பை காலாசவுக்கி போலீசார் விசாரணை நடத்தினர். ரிம்பிள் வருகிற 20-ந்தேதி வரை போலீஸ் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.