மதுரை உயர்நீதிமன்றத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கைவயல் கிராமத்தில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் மலம் கழித்த கழிவு நீர் கலந்து தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி புதுக்கோட்டை ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், “புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கைவயல் இறையூர் பஞ்சாயத்தில் சுமார் பத்தாயிரம் லிட்டர் அளவு கொண்ட நீர்த்தக்க தொட்டி அமைந்துள்ளது. இந்தத் தொட்டியில் கழிவு நீர் கலக்கப்பட்டுள்ளது.
இந்த நீரை குடித்த குழந்தைகளுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதனால், இந்த நீர்த் தேக்கத் தொட்டியில் கழிவு நீர் கலக்கப்பட்ட விவகாரம் குறித்து புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இருப்பினும், இந்த வழக்கு தொடர்பாக எந்த முன்னேற்றமும் இல்லாததால், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்று உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த மனு இன்று நீதிபதிகள் சுப்ரமணியன் மற்றும் விக்டோரியா கௌரி உள்ளிட்டோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
இதனை விசாரணை செய்த நீதிபதிகள்,” தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் சிபிஐக்கு மாற்றப்பட்டது. ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எந்த அமைப்புகளுக்கு விசாரணையை மாற்றினாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை.
மக்களும் காலப்போக்கில் அதனை மறந்து விடுகின்றனர். ஒருவேளை இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றினால் அவர்கள் தங்களிடம் தேவையான மனித வளம் இல்லை என்றுக் கூறுவார்கள்.
இது போன்ற மோசமான சம்பவங்களை கல்வியால் ஏற்படும் விழிப்புணர்வால் மட்டுமே தடுக்க இயலும். இந்த வழக்குத்த தொடர்பாக அறிக்கை மற்றும் ஆவணங்களை தமிழ்நாடு அரசு விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மேலும் இந்த விசாரணை மார்ச் 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டனர்.