அத்தியாவசிய மருந்து விலை ஏப்., 1 முதல் 12 சதவீதம் உயர்வு| Essential drug prices to rise by 1 to 12 percent in Apr

புதுடில்லி, வரும் ஏப்., 1 முதல், அத்தியாவசிய மருந்துகளின் விலையை, 12.12 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அத்தியாவசிய மருந்துகளின் விலையை, தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் நிர்ணயம் செய்கிறது.ஒவ்வொரு ஆண்டும் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் மருந்து விலையை திருத்தி வருகிறது.

இந்நிலையில், மூலப்பெருட்களின் விலை உயர்வு, உற்பத்தி செலவினம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் மருந்துகளின் விலையை அதிகரிக்க அனுமதிக்க வேண்டும் என, மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கோரிக்கை வைத்தன.
இதை பரிசீலித்த மத்திய அரசு, அத்தியாவசிய மருந்துகளின் விலையை, மொத்த விற்பனை விலைக் குறியீட்டின் அடிப்படையில், 12.12 சதவீதம் உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த விலை உயர்வு, வரும் ஏப்., 1 முதல் அமலுக்கு வர உள்ளது.

இதன்படி, தேசிய அத்தியாவசிய மருந்து பட்டியலில் இடம் பெற்றுள்ள வலி நிவாரணிகள், தொற்று நோய் தடுப்பு மருந்துகள், இதய நோய் மருந்துகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட, 800க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை, ஏப்., 1 முதல் அதிகரிக்க உள்ளது.

சந்தையில் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, இது போன்ற விலை உயர்வு, ஆண்டுதோறும் உயர்த்தப்படுவதாக தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு மருந்து பொருட்களின் விலை, 12 சதவீதத்திற்கு அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.