சென்னை: Rohini Theatre Issue (ரோகிணி தியேட்டர் சர்ச்சை) – ரோகிணி திரையரங்கில் நரிக்குறவர் இன மக்களை உள்ளே விடாத விவகாரம் குறித்து நடிகர் விஜய் சேதுபதி கருத்து தெரிவித்திருக்கிறார்.
கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் படம் பத்து தல. இதில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக், கௌதம் மேனன், ப்ரியா பவானி சங்கர், சென்ராயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்ற்னர்.ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
நேற்று ரிலீஸான பத்து தல
பத்து தல படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. காலை 5 மணி காட்சி ரத்து செய்யப்பட்டதால் 8 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. சிம்புவை திரையில் பார்ப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் பத்து தல ரிலீஸான திரையரங்குகள் முன் குவிந்தனர். கட் அவுட்டுகள் வைத்தும், சிம்புவை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பியபடியும் உற்சாகமாக காணப்பட்டனர். ஆனால் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுவருகிறது.

நரிக்குறவர்களை உள்ளே விடாத ரோகிணி தியேட்டர்
சென்னையில் இருக்கும் பிரபல திரையரங்கமான ரோகிணி திரையரங்கத்திலும் பத்து தல ரிலீஸானது. நேற்று காலை 8 மணி காட்சியை பார்க்க நரிக்குறவர் இனத்தை சேர்ந்த இரண்டு பெண்களும், ஒரு சிறுவனும் சென்றிருந்தனர். அவர்களிடம் டிக்கெட் இருந்தும் தியேட்டருக்குள் அனுமதிக்க ஊழியர் மறுத்துவிட்டார். இதுதொடர்பான வீடியோ நேற்று வெளியாகி பெரும் விவாதத்தை கிளப்பியது.

ரோகிணி விவகாரம் குறித்து விஜய் சேதுபதி
இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி நேற்று இரவு செய்தியாளர்களை சந்தித்தபோது இதுதொடர்பான கேள்வி அவரிடம் வைக்கப்பட்டது. அப்போது பேசிய அவர், “யாரும் யாரையும் ஒடுக்கப்படுவதை எப்போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அது எங்கு நடந்தாலும் எப்போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. மனுஷ பயலுங்க ஒன்னா வாழத்தான் இந்த பூமி படைக்கப்பட்ருக்கு” என தனக்கே உரிய பாணியில் பதிலளித்தார்.

ஜிவி பிரகாஷின் கண்டனம்
இந்த விவகாரம் வெளியே தெரிந்த பிறகு முதல் ஆளாக இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “அந்த சகோதரியும் சகோதரர்களும் பின் தாமதமாக அனுமதிக்கப்பட்டதாக விவரம் தெரிகிறது , எனினும் முதலில் அனுமதிக்க மறுத்தததை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது. கலைகள் அனைவருக்கும் சொந்தமானது” என பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ரோகிணி தியேட்டரின் முதல் விளக்கம்
முன்னதாக, நேற்று நிலைமை பூதாகரமானதை உணர்ந்த ரோகிணி தியேட்டரின் உரிமையாளர் நிகிலேஷ் முதலில் அளித்த விளக்கத்தில், “இவ்விவகாரம் நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்ததும் அவர்கள் படம் தொடங்குவதற்கு முன்பே சரியான நேரத்திற்கு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்” என கூறியிருக்கிறார். இருந்தாலும் ரோகிணி திரையரங்கம் அவ்வாறு செய்திருக்கக்கூடாது என பலரும் ரோகிணி திரையரங்கத்துக்கு தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

ரோகிணி தியேட்டர் அளித்த விளக்கம்
அதனைத் தொடர்ந்து அளித்த மற்றொரு விளக்கத்தில், “பத்து தல திரைப்படம் யு/ஏ சான்றிதழ் பெற்ற படம் என்பதால் 2 முதல் 10 வயது குழந்தைகளுடன் வந்தவர்களைத்தான் எங்கள் ஊழியர் தடுத்து நிறுத்தினார். ஆனால் இந்த விஷயத்தை சென்சிடிவ் பிரச்னையாக மாற்ற சிலர் நினைத்தனர்” என குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.