"ஜெயலலிதா மட்டும் இருந்திருந்தால்".. சட்டென சொன்ன சசிகலா.. திமுக அரசு மீது கடும் விமர்சனம்

சென்னை: சென்னை கலாஷேத்ரா கல்லூரி பாலியல் விவகாரம் பூதாகரமாக மாறியுள்ளதை அடுத்து, இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள சசிகலா திமுக அரசை கடுமையாக விமர்சித்திருக்கிறார். ஜெயலலிதா ஆட்சிக்காலமாக இருந்திருந்தால் இதுபோன்ற சம்பவம் நடந்திருக்காது எனக் கூறியுள்ள சசிகலா, திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பதே இல்லை எனவும் அவர் கூறியிருக்கிறார்.

சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா ருக்மணி தேவி கவின் கலைக்கல்லூரி இயங்கி வருகிறது. கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் இந்தக் கல்லூரிக்கு மத்திய கலாச்சார அமைச்சகம் நேரடி நிதியுதவி செய்து வருகிறது.

இந்திய அளவில் புகழ்பெற்ற இந்தக் கல்லூரி தற்போது பாலியல் புகாரில் சிக்கியுள்ளது. இந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பேராசிரியர் உட்பட 4 பேர் தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

kalashetra protest

புயலை கிளப்பிய விவகாரம்

கலாஷேத்ரா கல்லூரி முன்னாள் இயக்குநரே சமூக வலைதளத்தில் இந்த புகாரை பதிவிட்டது கடும் புயலை கிளப்பியுள்ளது. அந்த வகையில், அக்கல்லூரியில் படிக்கும் மாணவிகள் அந்த 4 பேரை கைது செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து சட்டசபையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

சசிகலா ஆவேசம்

இந்நிலையில், இந்த விவகாரத்தை முன்வைத்து சசிகலா காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது: கலாஷேத்ரா ருக்மணி தேவி கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக பேராசியர் உட்பட 4 பேர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை கோரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மாணவிகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த அவலநிலையை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன்.

sasikala

ஜெயலிதா ஆட்சிக்காலத்தில்..

ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் மாணவிகள் மிகவும் பாதுகாப்போடு இருந்தனர். ஆனால் இன்றோ தமிழ்நாட்டில் எங்குமே பாதுகாப்பு இல்லாத அவல நிலை இருக்கிறது. திமுக அரசு பொறுப்பேற்றது முதல், தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. ஜெயலலிதா ஆட்சி இருந்திருந்தால் பெண் பிள்ளைகளுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது.

தமிழ்நாடு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு உரிய விசாரணை நடத்தி, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தவர்களுக்கு கடுமையான தண்டனையை பெற்றுத்தர வேண்டும்.

கடுமையான தண்டனை வேண்டும்

கல்லூரி மாணவிகளிடமிருந்து புகார்கள் வரவில்லை என்பதை கூறிக்கொண்டு இருக்காமல், கலாஷேத்ரா கல்லூரியில் உள்ள மாணவிகளின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, நேர்மையாக விசாரணை மேற்கொண்டு, தவறு இழைத்தவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவிகள் கல்வி பயில தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தரவேண்டிய கடமை ஒவ்வொரு கல்வி நிறுவனத்திற்கும் உள்ளது. இதனை கல்வி நிறுவனங்கள் சரியாக கடைபிடிக்கின்றனவா? மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பது உறுதி செய்யப்படுகிறதா? என்பதையெல்லாம் தமிழ்நாடு அரசு முறையாக ஆய்வு செய்திட வேண்டும். இவ்வாறு சசிகலா கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.