ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பகுதியை சேர்ந்த தம்பதிகளுக்கு ஏற்கனவே ஏழு ஆண் குழந்தைகள் ஐந்து பெண் குழந்தைகள் என மொத்தம் 12 குழந்தைகள் இருக்கின்றனர்.
இந்நிலையில் கடந்த வாரம் 13வது குழந்தையாக ஒரு ஆண் குழந்தை மூன்று கிலோ எடையில் பிறந்தது.
இதை அறிந்த மாவட்ட மருத்துவக் குழு சம்மந்தபட்ட பெண்ணுக்கு கருத்தடை செய்துக் கொள்ள அறிவுரை கூறியுள்ளனர்.இந்நிலையில் அந்தப் பெண்ணை பரிசோதனை செய்ததில் உடல் பலம் இழந்து ரத்த சோகையால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்திருக்கிறது.
இதை அடுத்து மருத்துவக் குழுவினர் அந்தப் பெண்ணின் கணவருக்கு கருத்தடை சிகிச்சை செய்வதற்கான ஆலோசனையை கூறியுள்ளனர். ஆனால் அவர் கருத்தடை அறுவை சிகிச்சை எனக்கும் விருப்பமில்லை என் மனைவியும் செய்து கொள்ள மாட்டார் என அங்கு வந்த மருத்துவக் குழுவிடம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து எட்டு முறை மாவட்ட மருத்துவ குழுவினர் அந்த மலை கிராமத்திற்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பி இருக்கின்றனர். மருத்துவர்கள் வருவதை அறிந்து அந்த நபர் உடனே காட்டுக்குள் சென்று ஒளிந்து கொள்வாராம்.
இந்நிலையில் அந்த ஊர் கிராம அலுவலர் மற்றும் மருத்துவர்கள் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் சம்பந்தப்பட்ட நபரை நேரில் சென்று அறுவை சிகிச்சை செய்து கொள்வதின் நன்மையை எடுத்துக் கூறியுள்ளனர் .
தொடர்ந்து குழந்தைகளை பெற்றுக் கொள்வதனால் எதிர் காலத்தில் உங்கள் மனைவியின் உடல்நலம் அதிகளவில் பாதிப்படைய வாய்ப்பிருக்கிறது எனவும் மருத்துவர்கள் கூறி இருக்கின்றனர். இறுதியாக அந்த நபர் கருத்தடை சிகிச்சை செய்து கொள்வதற்கு ஒப்புதல் தெரிவித்திருக்கிறார்.
உடனே மாவட்ட மருத்துவக் குழு சொந்த செலவில் ஐந்து நாட்களுக்கு தேவையான அரிசி பருப்பு, முதலிய அனைத்து பொருட்களையும் வாங்கிக் கொடுத்துவிட்டு அவர் மனைவியின் பாதுகாப்பிற்காக இரண்டு ஆஷா பணியாளர்களையும் தங்க வைத்து விட்டு வந்திருக்கின்றனர்.
பின்னர் அவரை அந்த பகுதியின் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து அவருக்கு ஆண்களுக்கான நவீன கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. உடனே அவருக்கு ஊக்குத்தொகையும் அளித்து பாதுகாப்பாக மருத்துவ குழுவினர் அவரை வீட்டில் கொண்டு சேர்த்து விட்டும் வந்திருக்கின்றனர்.