தங்கத்தின் விலை இப்போது உச்சத்தில் இருக்கிறது. 22 காரட் ஆபரணத் தங்கம் 8 கிராம் விலை 2023 மார்ச் 30-ம் தேதிநிலவரப்படி 44,500 ரூபாயைத் தாண்டியுள்ளது.
40 ஆண்டுகளில் தங்கம் கொடுத்த வருமானம்..!
தங்கம் கடந்த 40 ஆண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக 9.6% வருமானம் கொடுத்துள்ளது. இந்தியாவின் நீண்ட கால பணவீக்க விகிதம் சராசரியாக 7 சதவிகிதம் என்கிற போது அதனை விட சுமார் 2.5 சதவிகித வருமானம் என்பது நல்ல வருமானம் என்று சொல்லலாம். காரணம், இந்த வருமானம் அதிக ரிஸ்க் இல்லாமல் கிடைத்திருப்பதாகும்.

ஆனால், ஆண்டுக்கு ஆண்டு தங்கம் நல்ல வருமானம் கொடுக்கும் என சொல்ல முடியாது. தங்கம் மைனஸ் வருமானம் கொடுத்த ஆண்டுகளும் இருக்கின்றன. சுமார் 5 ஆண்டுகள் வரை எதுவும் வருமானம் கொடுக்காத காலமும் இருந்திருக்கிறது. எனவே, தங்கம் அதிக வருமானம் கொடுக்கும் என்கிற எதிர்பார்ப்புடன் வருபவர்கள், அதன் விலை குறைவாக இருக்கும் காலத்தில் வாங்கி வைத்துவிட்டு நல்ல விலை உயர்வு ஏற்படும் வரை காத்திருப்பது மிக முக்கியமாகும்.
தங்கம் விலை எப்போது உயரும்?
பொதுவாக, உலக அளவில் கெட்ட விஷயங்கள் நடக்கும் போது தங்கத்தின் விலை வேகமாக உயரத் தொடங்கும். அமெரிக்கா – சீனா வர்த்தகப் போர், கொரானா 19 பாதிப்பு, ரஷ்யா- உக்ரைன் போர் மற்றும் பொருளாதார மந்த நிலை காரணமாக தங்கம் விலை உயர்ந்து வந்துள்ளது.
பங்குச் சந்தை முதலீடும் தங்கம் முதலீடும் கிரியும் பாம்பும் போல இருக்கும். பெரும்பாலும் இவற்றின் விலை எதிர் எதிர் திசையில்தான் செல்லும். பொதுவாக, பங்குச் சந்தைகள் சிறப்பாக செயல்படும் போது தங்கத்தின் விலை இறங்கி காணப்படும்.

தங்கத்தில் முதலீடு செய்ய பல வழிகள்..!
தங்கத்தின் அதீத விலை ஏற்றத்தை பார்த்து நம்மில் பலர் தங்கத்தை முதலீட்டு நோக்கில் வாங்கி வருகிறார்கள். தங்கத்தில் முதலீடு செல்ல பல வழிகள் உள்ளன.
பொதுவாக, பொது மக்கள் தங்க நகைகளாக வாங்கி சேர்க்கிறார்கள். ஓர் அவசரத் தேவைக்கு அதனை பெரும்பாலும் அடமானம் வைக்கிறார்கள். சில நேரங்களில் விற்கிறார்கள். அப்படி செய்யும் போது ஏற்கெனவே தங்க நகை வாங்கிய போது கொடுத்த சேதாரம், செய்கூலி சுமார் 12% மற்றும் ஜி.எஸ்.டி வரி 3% ஆக மொத்தம் கிட்டத்தட்ட 15% இழப்பு ஆகும். பழைய நகை என்பதால் விலையில் சிறிது தள்ளுபடி செய்வார்கள். இதனை எல்லாம் தாண்டி தங்கத்தின் விலை ஏற்றம் கண்டிருந்தால் மட்டுமே அதில் லாபம் இருக்கும். இல்லை என்றால் அவசரத் தேவைக்கு உதவியது என்கிற பயன் மட்டுமே இருக்கும். தங்க நாணயமாக இருந்தால் ஜி.எஸ்.டி வரி 3% இழப்பாக இருக்கும். ஆனால், தங்க நகை, தங்க நாணயத்தை இவற்றை வாங்கி கடைகளில் அல்லது வங்கிகளில் விற்க முடியாது. கடைகளில் விற்பது என்றாலும் சுமார் 15 சதவிகித தொகையை மட்டுமே பணமாக தருவார்கள். மீதியை வேறு நகையாகத்தான் வாங்கிக் கொள்ள வேண்டும்.
அந்த வகையில், ரிசர்வ் வங்கி வெளியிடும் மத்திய அரசின் தங்கப் பத்திரங்கள் (Sovereign Gold Bonds), மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் கோல்டு இ.டி.எஃப் (Gold ETF), கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட் (Gold Savings Fund) ஆகியவை முக்கியமான முதலீட்டு வழிகளான உள்ளன.
தங்கப் பத்திரங்கள்
இந்தப் பத்திரங்களை மத்திய அரசு சார்பாக ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது. இதை ஒரு கிராம் அளவிலிருந்து வாங்கலாம். ஒரு கிராமை ஒரு யூனிட் என்பார்கள். நிதியாண்டில் அதிகபட்சமாக ஒருவர், 4 கிலோ வரைக்கும் வாங்கமுடியும்.
இதன் முதலீட்டுக் காலம் எட்டு ஆண்டுகள். அதன்பிறகு அதை விற்றால் நீண்ட கால மூலதன ஆதாய வரி கிடையாது. அதேநேரத்தில், முதலீடு செய்த ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு யூனிட்களை விற்று பணமாக்கி கொள்ள முடியும். மேலும், ஆரம்ப முதலீட்டுத் தொகைக்கு 2.5% வட்டி வழங்கப்படும். இந்தப் பத்திரங்களை காகித வடிவில் அல்லது எலெக்ட்ரானிக் வடிவில் வாங்க முடியும். ஆன்லைன் மூலம் வாங்கும் போது தங்கத்தின் விலையில் கிராம் ஒன்றுக்கு ரூ.50 தள்ளுபடி அளிக்கப்படுகிறது.

ஆன்லைனில் இந்தத் தங்கப் பத்திரத்தில் முதலீடு செய்ய டீமேட் கணக்கு அவசியம். பங்கு முதலீடு மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கு பயன்படுத்தும் டீமேட் ஏற்கெனவே இருந்தால் அதன் மூலமே இந்தப் பத்திரத்தில் முதலீடு செய்து கொள்ளலாம். இந்தப் பத்திரங்கள் என்.எஸ்.இ மற்றும் பி.எஸ்.இ பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படுகிறது. இதனால், இடையில் எப்போது வேண்டுமானாலும் விற்றுப் பணமாக்கிக்கொள்ள முடியும். ஆனால், அப்படிச் செய்யும்போது அதனை வாங்குவதற்கு ஆள் இருக்க வேண்டும். மேலும், அதற்கு வரி கட்ட வேண்டி வரும். யூனிட்டுகளை விற்றால், நம் வங்கிக் கணக்குக்கு பணம் வந்துவிடும். அந்தத் தொகையைக் கொண்டு, தேவைப்படும் நகையை நாம் வாங்கிக்கொள்ள வேண்டும்.
இந்தப் பத்திரங்களை ஆண்டில் சில முறைகள் தான் ஆர்.பி.ஐ வெளியிடுகிறது. அப்போது பங்குச் சந்தைகள், வங்கிகள், தபால் அலுவலகங்கள் போன்றவற்றின் மூலம் முதலீடு செய்ய முடியும். தங்கத்தின் விலை ஏற்றத்தின் மூலம் கிடைக்கும் லாபத்துடன், ஆண்டுக்கு 2.5% வட்டி வருமானமும் கிடைக்கும் என்பது இதன் சிறப்பு அம்சமாகும்,
கோல்டு இ.டி.எஃப்
மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், இந்த கோல்டு எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்டுகளை (கோல்டு இ.டி.எஃப்) வெளியிடுகின்றன. இதிலும், ஒரு கிராம் என்பதை ஒரு யூனிட் என்கிறார்கள். தங்கத்தின் மிகவும் உயர்ந்துவிட்டதால், இப்போது ஒரு கிராமை 100 ஆக பிரித்து ஒரு யூனிட் விலை சுமார் ரூ. 55 என வைத்திருக்கிறார்கள்.
தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துக்கேற்ப அதன் யூனிட் மதிப்பு மாறும். முதலீடு செய்ய டீமேட் கணக்கு அவசியம். யூனிட்டுகளை விற்கும்போது வங்கிக் கணக்குக்கு பணம் வந்துசேரும். அதைக் கொண்டு நாம் தேவையான புதிய நகையை வாங்கிக் கொள்ளலாம். யூனிட்கள் டீமேட் கணக்கில் இருப்பதால், தேவைக்கு விற்று பணமாக்க முடியும்.

நிறுவனர்,
www.gururamfinancialservices.com
கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட்
இந்த கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட் திட்டத்தை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் வைத்திருக்கின்றன. இதில், மாதம் ரூ.100 மற்றும் ரூ.500 கூட முதலீடு செய்து வரலாம். சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்கிற எஸ்.ஐ.பி முறையிலும் முதலீடு செய்யும் வசதி இருக்கிறது. மேலும், ஒருவரின் வசதியைப் பொறுத்து 1,000 ரூபாய், 2,000 ரூபாய் என மாதம் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.
இந்த கோல்டு சேவிங்ஸ் ஃபண்டில் முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும் பணம், வேறு ஒரு ஃபண்டில் முதலீடு செய்ய்யபடுகிற்து; இது ‘ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் வகையைச் சேர்ந்தது. இந்த ஃபண்டில் திரட்டப்படும் நிதியின் பெரும்பகுதி, கோல்டு இ.டி.எஃப் ஃபண்டில் முதலீடு செய்யப்படுகிறது. இதனால், கோல்டு இ.டி.எஃப் ஃபண்டை விட ஓரிரு சதவிகிதம் குறைவான வருமானம் கோல்டு சேவிங்ஸ் ஃபண்டில் கிடைக்கும்.
இதில் முதலீடு செய்ய பான் கார்டு, ஆதார் கார்டு இருந்தால் போதும். யூனிட்டுகளை விற்றால், சில தினங்களில் வங்கிக் கணக்குக்கு பணம் வந்துவிடும்.
எந்தத் திட்டம் யாருக்கு ஏற்றது?
கோல்டு இ.டி.எஃப் திட்டத்தில் முதலீடு செய்ய டீமேட் கணக்கு தேவை. ஏற்கெனவே டீமேட் கணக்கு வைத்திருப்பவர்கள் அதனை கொண்டு முதலீடு செய்யலாம். டீமேட் கணக்குக்கான ஆண்டு பராமரிப்புக் கட்டணம் சுமார் 300 – 500 ரூபாய் ஆகும். இந்தக் கட்டணம் சிறு முதலீட்டாளர்களுக்கு இழப்பாக இருக்கும் அதைப் போக்கும் விதமாகத்தான் கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட் கொண்டு வரப்பட்டது.

பெரிய தொகையை தங்கத்தில் முதலீடு செய்பவர்கள், கோல்டு இ.டி.எஃப்-ல் முதலீடு செய்யலாம். உங்கள் வசதிக்கேற்ற ஒரு முறையை தேர்ந்தெடுத்து முதலீடு செய்து வரலாம். பொதுவாக, ஒருவரின் மொத்த முதலீட்டுத் தொகையில் சுமார் 10-15 சதவிகிதத் தொகையைதான் தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும்.
24 காரட் 10 கிராம்: தங்கத்தின் சராசரி விலை..!

