“திருச்சிக்கு இன்னும் என்ன செய்யணும்னு நினைக்கிறீங்க?” – பட்டியலிட்ட அமைச்சர் கே.என்.நேரு

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ரூ.1.23 கோடி மதிப்பீட்டில் தானியங்கி நோய் எதிர்ப்பு குருதி பகுப்பாய்வு இயந்திரம், ரூ.47 லட்சம் மதிப்பீட்டில் திரவ பிராணவாயு கொள்கலன் மற்றும் ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மின் தூக்கி ஆகியவற்றை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.

நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய கே.என்.நேரு, “நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் வரும் என எடப்பாடி பழனிசாமி சொல்வது அவருடைய ஆசை, அதுக்கு நாங்க என்ன பண்ணுவோம். அவரு நாளைக்கே வரணும்னு கூட நினைப்பாரு. அதுக்கெல்லாம் நாங்க பொறுப்பா! எங்க முதலமைச்சர் பிரமாதமாக ஆட்சி செஞ்சிக்கிட்டு இருக்காரு. மகளிருக்கு 1000 ரூபாய் தரவிருக்கிறோம். சட்டமன்றத் தேர்தல் எப்போது வருமோ அப்போது தான் வரும்” என்றார்.

நிகழ்ச்சியில் கே.என்.நேரு

‘நடப்பு பட்ஜெட்டில் திருச்சி மாவட்டம் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது என விமர்சனங்கள் சொல்லப்படுகிறதே!’ என்ற செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, “திருச்சிக்கு சித்த மருத்துவக் கல்லூரியும், பல் மருத்துவக் கல்லூரியும் கேட்டிருந்தோம். மகளிர்க்கு 1000 ரூபாய் கொடுக்குறதால அடுத்த ஆண்டு அதை செஞ்சித் தாரேன்னு சொல்லிட்டாங்க. பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திற்கு ரூ.100 கோடி, சாலைகளுக்காக ரூ.300 கோடி, உயர்மட்ட மேம்பாலத்திற்காக ரூ.800 கோடி என கடந்த ஓராண்டில் மட்டும், திருச்சிக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய்க்கான திட்டங்களை முதல்வர் கொடுத்திருக்கிறார். 10 வருஷத்துக்கு முன்னாடி திருச்சி என்ன வாழ்ந்தது, இப்ப என்ன வாழலைன்னு பத்திரிகைகாரங்க நீங்களே சொல்லுங்க? 10 வருஷமா அ.தி.மு.க., ஆட்சியில் திருச்சிக்கு என்னங்க செஞ்சாங்க? திருச்சியை நேசிப்பவர் நம்முடைய முதல்வர். அப்படியிருக்க திருச்சியை எப்படி புறக்கணிப்பாங்க. நிச்சயமாக திருச்சிக்கு எல்லாமே கிடைக்கும். சமீபத்தில் கூட மணப்பாறை சிப்காட்டில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையை முதல்வர் கொடுத்துருக்காரு. அதனால 10 ஆயிரம் மகளிருக்கு வேலை கிடைக்கும். என்ன கேட்டாலும் திருச்சிக்கு செய்ய முதலமைச்சர் காத்துக்கிட்டு இருக்காரு. அப்படியிருக்க திருச்சியை புறக்கணிக்கணிக்கிறாங்கன்னு சொன்னா என்ன அர்த்தம்.

 20 ஆயிரம் பேருக்கு பட்டா கொடுத்துருக்கோம். அரசு நலத்திட்டம் தடையில்லாமல் கொடுக்கப்படுகிறது. புதிய காவிரிப் பாலம் கட்ட வேலைகள் நடக்கிறது. பழைய காவிரிப் பாலத்தை ரிப்பேர் பண்ணியிருக்கோம். திருச்சி மாநகரின் விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளுக்கு 100 எம்.எல்.டி தண்ணீர் கொடுக்க வேலைகள் நடந்து வருகின்றன. இவ்ளோ திட்டங்களை முதல்வர் திருச்சிக்கு கொடுத்திருக்க, இன்னும் என்ன செய்யணும்னு நினைக்கிறீங்க. திருச்சி புறக்கணிக்கப்படவில்லை மற்றவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு முதலமைச்சர் திருச்சிக்கு நிதி ஒதுக்கியிருக்கிறார்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.