திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் உதவி காவல் துறை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த பல்வீர் சிங் மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. சிறு சிறு பிரச்சனைகளில் சிக்கும் விசாரணை கைதிகளை திரைப்படம் பாணியில் கொடூரமான தண்டனைகளை வழங்கப்படுவதாக என புகார் எழுந்தது.
விசாரணை கைதிகளாக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட 10 இளைஞர்களின் பற்களை கட்டிங் பிளேடு கொண்டு பிடங்கியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த விவகாரம் தமிழக முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் மாநில மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விவகாரத்தில் மூளையாக செயல்பட்ட பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதேபோன்று திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் மனித உரிமை மீறல் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் தொடர்ச்சியாக ஆறு காவல்துறை அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அதன்படி அம்பாசமுத்திர காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன், கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளர் ராஜகுமாரி, விக்கிரமசிங்கபுரம் காவல் ஆய்வாளர் பெருமாள், திருநெல்வேலி தனிப்படை உதவி ஆய்வாளர் சக்தி நடராஜன், தனிப்படை காவலர் மணிகண்டன் மற்றும் சந்தன குமார் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பல் பிடுங்கிய விவகாரத்தில் மேலும் சில அதிகாரிகள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.