"எப்படிங்க கொல்லலாம்".. "அதுவும் முன்னாள் எம்எல்ஏ".. உபி யில் பாஜக அரசை கலைக்கணும்.. தமிமுன் அன்சாரி ஆவேசம்

தஞ்சாவூர்:
உத்தரபிரதேசத்தில் ரவுடியும், முன்னாள் எம்எல்ஏவுமான அடிக் அகமது கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, அங்கு பாஜக தலைமையில் நடைபெறும் காட்டாட்சியை கலைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

உத்தரபிரதேசத்தில் மிகப்பெரிய ரவுடியாக வலம் வந்த அடிக் அகமது போலீஸார் முன்னிலையிலேயே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர வைத்தது. அதற்கு இரு தினங்களுக்கு முன்புதான் அடிக் அகமதின் மகன் ஆசாத், போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது உடலுக்கு இறுதிச்சடங்குகள் செய்வதற்காக அடிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரஃப் ஆகியோரை நேற்று முன்தினம் போலீஸார் அழைத்து வந்தனர்.

இறுதிச்சடங்கு முடிந்து அவர்களை மீண்டும் சிறைக்கு கொண்டு செல்லப்படும் போது அங்கிருந்த செய்தியாளர்கள், அடிக் அகமதை சூழ்ந்து கொண்டு கேள்வியெழுப்பிய வண்ணம் இருந்தனர். அப்போது அங்கு 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் இருந்தனர். இந்நிலையில், அந்தக் கூட்டத்தில் இருந்த திடீரென வெளியே வந்த 3 பேர், ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம் எழுப்பியபடியே அடிக் அகமதைதும், சகோதரர் அஷரஃபையும் சுட்டுக் கொன்றனர்.

போலீஸார் கண் முன்பே நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி கருத்து தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சிக்கு பிறகு தமிமுன் அன்சாரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

காஷ்மீரில் புல்வாமாவில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பின்னால் மத்திய அரசின் அலட்சியப்போக்கு இருப்பதாக அம்மாநில முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். ஆனால், இதுகுறித்து பிரதமரிடம் கூறியபோது, இது பற்றி வெளியே பேச வேண்டும் கூறியதாக சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். இது உண்மையில் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்த விவகாரத்தில் ஒளிந்திருக்கும் உண்மைகளை வெளியே கொண்டு வர வேண்டும். இதற்காக உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்.

உத்தரபிரசேத்தில் போலீஸ் பாதுகாப்பில் இருக்கும் போதே முன்னாள் எம்எல்ஏ அடிக் அகமது சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். அப்படி என்றால், அங்கு சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பது நன்றாக புரிகிறது. அடிக் அகமது கொலை போன்ற சம்பவம் நாட்டில் வேறு எங்கும் நடைபெற்றதில்லை. எனவே உபியில் பாஜக தலைமையில் நடந்து வரும் காட்டாட்சியை கலைக்க வேண்டும். இவ்வாறு தமிமுன் அன்சாரி கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.