நீலகிரியைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் தனியார் பள்ளி ஒன்றில் 5- ம் வகுப்பு படித்து வருகிறார். தனது பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வரும் இவர், தனது அண்டை வீட்டில் வசித்து வரும் 78 வயதான முதியவர் வீட்டுக்கு சமையல் பாத்திரங்களை திரும்பக் கொடுக்கச் சென்றிருக்கிறார். அந்த வீட்டில் இருந்த முதியவர், திடீரென சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றிருக்கிறார். பயத்தில் பதற்றமடைந்த சிறுமி முதியவரின் வீட்டிலிருந்து தப்பி வெளியே ஓடி வந்திருக்கிறார்.

தனக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல் குறித்து தனது பாட்டியிடம் தெரிவித்திருக்கிறார். சிறுமியின் பாட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர், சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த 78 வயது முதியவரை கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த கொடூரம் குறித்து காவல்துறையினர், “சிறுமியின் குடியிருப்பு அருகில் வசித்து வரும் ஜான் லெஸ்லி என்ற முதியவர் அக்க ம்பக்கத்தில் உள்ளவர்களிடம் நட்பு பாராட்டும் வகையில் பழகி வந்திருக்கிறார். இந்த நிலையில், தனது பக்கத்து வீட்டு சிறுமி சமையல் பாத்திரங்களை திரும்பக் கொடுக்க வந்தபோது பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் முதியவரிடம் விசாரணை செய்தோம். பாலியல் அத்துமீறல் உறுதிசெய்யப்பட்டது. போக்சோ வழக்கில் உடனடியாக அவரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தோம்” என்றனர்.