இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகளும் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவியுமான அக்ஷதா மூர்த்தி, பிரிட்டன் ராணியை விட அதிக சொத்து மதிப்பு கொண்டவர் ஆவார்.
இன்ஃபோசிஸ் இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை மற்றும் மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமாக விளங்குகிறது. இன்ஃபோசிஸ் நிர்வாகம் தனது பங்குதாரர்கள் அனைவருக்கும் ஒரு பங்கிற்கு ரூ.17.50 ஈவுத்தொகையாக வழங்கப்படும் என அறிவித்தது.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தில், டிசம்பர் 31, 2022 நிலவரப்படி இன்ஃபோசிஸ் மொத்த பங்குகளில் 3,89,57,096 பங்குகள் அதாவது 1.07 சதவீத பங்குகளை அக்ஷதா மூர்த்தி வைத்திருந்தார்.
இன்ஃபோசிஸ் அறிவிப்பின்படி, ஒரு பங்கிற்கு ரூ.17.50 ஈவுத்தொகை என சுமார் ரூ.68.17 கோடி ஈவுத்தொகையை அக்ஷதா மூர்த்தி ஜூன் மாதத்தில் பெற இருந்தார்.
ஏப்.13ம் தேதி மார்ச் காலாண்டு முடிவுகளை இன்ஃபோசிஸ் வெளியிட்டது. மொத்தம் ரூ.37,441 கோடி வருவாயுடன், ரூ 6,128 கோடி லாபம் ஈட்டியிருந்தது. கடந்தாண்டு நிலவரத்துடன் ஒப்பிட்டு பார்க்கும்போது இந்த வருமானம் 2.3 சதவீதம் குறைவாகும். இது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கவில்லை.
இதனால் நேற்று முன்தினம் திங்கட்கிழமை வர்த்தகத்தில் இன்ஃபோசிஸ் பங்குகள் 9.4% சதவீதம் வரையில் சரிந்தது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமான சரிவு ஆகும். இதனால், அன்று ஒரே நாளில் அக்ஷதா மூர்த்திக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது அக்ஷதா வசமுள்ள இன்ஃபோசிஸ் பங்கு மதிப்பு ரூ.6,000 கோடியாக குறைந்துள்ளது.