தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி செயலகம் மற்றும் அமைச்சுகள் இணைந்து ஏற்பாடு செய்யும் “வசத் சிரிய 2023” போட்டி நிகழ்ச்சிகளுக்கான விண்ணப்பங்கள் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மதியம் 12.00 மணி வரையில் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “வசத் சிரிய 2023” போட்டி நிகழ்ச்சிகள் ஏப்ரல் 22 சனிக்கிழமை காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையில் கொழும்பு ஷங்கிரீலா கிரீன் வளாகத்தில் நடைபெறவுள்ளதோடு, அரச துறை, திறந்த பிரிவு, வெளிப்பிரிவு என்ற மூன்று கட்டங்களின் கீழ் போட்டி நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அரச ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தவர்கள், நண்பர்கள் மற்றும் பிள்ளைகளுக்கான ஆண்கள், பெண்களுக்கான 18 போட்டி நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அதேநேரம். இதற்குள் மறைந்திருக்கும் விருந்தினரை தேடுதல் பப்பாசிப் பழத்தின் விதைகளை கணக்கிடுதல், மறைந்திருக்கு விருந்தினரை தேடிப்பிடித்தல், யானைக்கு கண் வைத்தல், கண்கட்டி முட்டி உடைத்தல், தென்னை ஓலைப் பின்னல், தேங்காய் துருவுதல், தலையணைச் சண்டை, பணிஸ் உண்ணுதல், சூப்பியில் பானம் அருந்தல், ஊசிக்குள் நூல் இடுதல், 100 மீற்றர் ஓட்டம், கண்கட்டியவருக்கு தயிர் ஊட்டுதல், தடைகளைக் கடத்தல், பலூன் உடைத்தல், மெழுகுவர்த்தி ஏற்றல், கரண்டியின் மீது தேசிக்காய் எந்திச் செல்லல், கயிறு இழுத்தல், சங்கீத கதிரைப் போட்டி, சங்கீத தொப்பி போட்டி, சிறந்த சிரிப்பு, பெரிய வயிற்றை தெரிவு செய்தல், புத்தாண்டு அழகன்,அழகியை தெரிவு செய்தல், சறுக்கு மரம் ஆகிய விளையாட்டுக்கள் உள்ளடங்கும்.
அதேபோல் இலங்கையர்களுக்கான 16 திறந்த சுற்று போட்டிகளும் இடம்பெறவுள்ள நிலையில் ஸ்டேண்டட் சைக்கிளோட்டம், மரதன் ஓட்டம், சறுக்கு மரம் ஏறுதல், கயிறு இழுத்தல், தலையணைச் சண்டை, மெழுகுவர்த்த ஏற்றல், பலூன் உடைத்தல், யானைக்கு கண் வைத்தல், டொபி உண்ணுதல், சிறந்த சிரிப்பு, புத்தாண்டு அழகி, அழகனை தெரிவுச் செய்தல் உள்ளிட்ட சிறுவர் மற்றும் பெரியவர்களுக்கான போட்டி நிகழ்வுகளும் உள்ளடங்கும்.
அதேபோல் வெளிநாட்டு தூதரங்கள், அண்மித்த ஹோட்டல்களில் தங்கியிருப்போருக்காக வெளிப்பிரிவு போட்டிகள் நடத்தப்படவுள்ளதோடு, அதற்குள் யானைக்கு கண் வைத்தல், கண் கட்டி முட்டி உடைத்தல், ஊசிக்குள் நூல் இடுதல், கண் கட்டியவருக்கு தயிர் ஊட்டுதல், பலூன் உடைத்தல், கரண்டியின் மீது தேசிக்காயை ஏந்திச் செல்லல், சங்கீத கதிரைத் போட்டி, சங்கீத தொப்பி போட்டி, சில்லறைக் குற்றியை தேடுதல், சாக்குப் பாய்ச்சல், பணிஸ் உண்ணல் உள்ளிட்ட 10 போட்டி நிகழ்ச்சிகளும் உள்ளடங்கும்.
“வசத் சிரிய 2023” புத்தாண்டு அழகி, அழகனை தெரிவு , மரதன் ஓட்டம் , ஸ்டேண்டட் சைக்கிளோட்டம், தலையணைச் சண்டை , கயிறு இழுத்தல், உள்ளிட்ட போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளதுடன், www.pmd.gov.lk பிரவேசித்து விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள முடியும்.
அனைத்து வெற்றியாளர்களுக்கும் சான்றிதழ்கள் மற்றும் பெறுமதியான பரிசுகளை வழங்க ஏற்பாட்டுக் குழு தீர்மானித்துள்ளது.
“வசத் சிரிய 2023” இசை நிகழ்வு இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகும்.