சென்னை: அட்சய திருதியை நாளான இன்று தங்கம் வாங்கப் பலரும் ஆர்வமாக இருக்கிறார்கள். அதேநேரம் தங்கம் வாங்கும் போது, அதைப் பாதுகாப்பாகப் பராமரிப்பது ரொம்பவே முக்கியமாகிறது. அதற்கு நாம் செய்ய வேண்டியதைப் பார்க்கலாம்.
ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை அன்று தங்கம் வாங்குவதைப் பலரும் வழக்கமாகவே வைத்துள்ளனர். அட்சய திருதியை என்றால் “வளர்க” என்று அர்த்தமாகும். அன்று நாம் செய்யும் அனைத்தும் மேலும் வளரும் என்பதே நம்பிக்கை.
அன்றைய தினம் வாங்கும் பொருட்களும் அதிகம் குவியும் என்பது நம்பிக்கை.. இதன் காரணமாகவே அட்சய திருதியை அன்று அனைவரும் தங்கம் வாங்க விரும்புவர். அதன்படி இன்று காலை முதலே தங்கம் வாங்க நகைக் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.
தங்கம்: தங்க நகைகளைப் பலரும் வாங்கிக் குவித்தாலும் கூட அதை எப்போதும் அணிய மாட்டார்கள் என்றும் விலை உயர்ந்து கொண்டே இருக்கும் தங்கத்தை பெரும்பாலும் வீடுகளிலேயே வைத்திருப்பார்கள். எதாவது முக்கிய நிகழ்வுகளுக்கு மட்டுமே தங்கத்தை அணிந்து செல்வார்கள். மற்ற நாட்களில் அது பீரோவிலோ அல்லது லாக்கரிலோ தான் இருக்கும். இருப்பினும், தங்கத்தின் விலை எப்போதும் உயர்ந்தே வருவதால் அதை ஒரு முதலீடாகக் கருதியே பலரும் முதலீடு செய்து வருகின்றனர்.
இதனால் பெரும்பாலும் அவை லாக்கரில் தான் இருக்கும். இருப்பினும், எப்போதும் இப்படிப் பூட்டியே வைத்திருந்தால் தங்க நகைகளின் நிறம் மாறவும் கூட வாய்ப்பு இருக்கிறது. நகையை முறையாகப் பராமரிக்கவில்லை என்றால் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. சரி, தங்க நகைகளை எப்படிப் பளபளப்பாக வைத்திருக்க வேண்டும்.. அதை எப்படிப் பராமரிக்க வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.

என்ன செய்ய வேண்டும்: வெளியே சென்று திரும்பும் போது, தங்க நகைகளை அப்படியே பாக்ஸில் போட்டு வைக்கக் கூடாது. வெளியே சென்று திரும்பினால் நகைகளில் வியர்வை, தூசி, எண்ணெய் பிசுக்குகள் இருக்கும். எனவே, அதை அப்படியே மூடி வைக்காமல் ஷாம்பூ கலந்து வெதுவெதுப்பான நீரில் சிறிது நேரம் ஊற வைத்துக் கழுவ வேண்டும். அதன் ஈரம் காய்ந்த பிறகு பாக்ஸில் போட்டு வைக்க வேண்டும். நகையைப் பராமரிக்க நாம் செய்ய வேண்டிய முக்கியமானது இதுவாகும்.
அதேபோல பல நகைகள் இருந்தால்.. அதை ஒரே பாக்ஸில் போட்டு வைக்கக் கூடாது. நகைகள் ஒன்றோடு ஒன்று சிக்கி உடைய வாய்ப்பு இருக்கிறது. அதிலும் குறிப்பாகக் கற்கள் உள்ள நகைகளில் உராய்வு ஏற்பட்டு கற்களின் நிறம் மங்கலாம். சில சமயங்களில் கற்கள் தனியாகக் கூட வந்துவிடும். எனவே, எப்போதும் நகைகளை அதற்கே உரிய பாக்ஸ்களில் போட்டு வைக்க வேண்டும்.

கெமிக்கல்: மேலும், நீங்கள் குளிக்கச் செல்கிறீர்கள் என்றால் நகைகளை அணிந்து குளிக்கக் கூடாது. அது நகைகளைச் சேதப்படுத்தவே செய்யும். நாம் பயன்படுத்தும் சோப் கெமிக்கல் நகையைப் பாதிக்கலாம். எனவே தங்க நகைகளைக் கழட்டி வைத்துவிட்டுக் குளிக்கச் செல்வது நலம். அதேபோல நமது வாசனை ஸ்ப்ரேகள், பாடி லோஷன், கிரீம்கள் அதன் மீது படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
நகைகளைச் சுத்தம் செய்யும் போதும் சோடா, டூத் பேஸ்ட், டிஷ் வாஷ் சோப் உள்ளிட்டவற்றை பயன்படுத்தக் கூடாது. நகைகளை அழுத்தித் தேய்த்தால் நகைகளில் கீரல் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, மிகவும் கவனமாகச் சுத்தம் செய்ய வேண்டும். மேலும், ஒவ்வொரு சில ஆண்டுகளுக்கு ஒரு முறை நகைகளை பாலிஷ் போடலாம். இதன் மூலம் நகைகளை எப்போதுமே புதிதுபோல் வைத்துக் கொள்ளலாம்.
நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்யும் போது உடலில் அதிகம் வியர்வை வரும். அப்படி அதிகம் வியர்வை வந்தால் நகைகள் மிக எளிதாகப் பாழாகும் என்பதால் உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்யும் போது எப்போது நகைகளை அணிய வேண்டாம்.