வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இஸ்லாமாபாத்: ‘இந்தியாவின், ‘டிவி’ சேனல்களை ஒளிபரப்பக் கூடாது. இதை மீறும் கேபிள் ஆப்பரேட்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என, பாக்., எச்சரிக்கை விடுத்துள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானுடன், ஜம்மு – காஷ்மீர் விவகாரம் மற்றும் இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதிகளை ஊக்குவிப்பது தொடர்பாக, பிரச்னை நீடித்து வருகிறது. இதனால், நம் நாட்டுக்கும், அந்நாட்டுக்கும் இடையேயான உறவில் கசப்பான மனநிலை நிலவி வருகிறது. கடந்த 1965ல் இருநாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட போருக்குப் பின், நம் நாட்டு திரைப்படங்களுக்கும், ‘டிவி’ சேனல்களுக்கும் பாக்., அரசு தடை விதித்தது.
இந்நிலையில், ‘இந்திய சேனல்களை ஒளிபரப்பினால், கேபிள் ஆப்பரேட்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என, பி.இ.எம்.ஆர்.ஏ., எனப்படும், பாக்., மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து, பி.இ.எம்.ஆர்.ஏ., நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையும், ஆணையத்தின் விதிகளையும் மீறி, சில ஆப்பரேட்டர்கள், இந்திய சேனல்களை ஒளிபரப்பி வருவது கவனத்திற்கு வந்துள்ளது. இனி வரும் காலங்களில், இது போன்ற நிகழ்வுகள் நடக்கக் கூடாது.
உத்தரவை மீறி இந்திய சேனல்களை ஒளிபரப்பும் கேபிள் ஆப்பரேட்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement