ஜாரிகான்: ஒடிசாவில் ஓய்வூதிய பணத்தை வாங்க, 70 வயது மூதாட்டி ஒருவர், உடைந்த நாற்காலி உதவியுடன், கொளுத்தும் வெயிலில், வெறுங்காலுடன் வங்கிக்கு நடந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்கு, ஜாரிகானில் 70 வயது மூதாட்டி சூர்யா, தன் இளைய மகன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், ஓய்வூதிய பணத்தை வாங்க, சூர்யா சமீபத்தில் உடைந்த நாற்காலி உதவியுடன், கொளுத்தும் கோடை வெயிலில், செருப்பு இல்லாமல் தார்ச்சாலையில் வெறுங்காலுடன் நடந்து சென்றார். இது தொடர்பான ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து, பாரத ஸ்டேட் வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மூதாட்டி சூர்யாவுக்கு விரல் உடைந்துள்ளதால், கைரேகை பொருந்தவில்லை. இதனால், பணம் எடுப்பதில் சிரமம் ஏற்படுகிறது. எனினும் அவருக்கு நேரடியாக, 3,000 ரூபாயை எடுத்து கொடுத்து உள்ளோம்’ என்றார்.
இதற்கிடையே, மூதாட்டி சூர்யாவின் வீடியோவை, சமூக வலைதளத்தில் பார்த்த, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய நிதி அமைச்சருமான நிர்மலா சீதாராமன், இது குறித்து நடவடிக்கை எடுக்க, வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து, அடுத்த மாதம் முதல், சூர்யாவின் வீட்டிற்கே நேரடியாக சென்று ஓய்வூதிய பணத்தை வழங்க உள்ளதாக தெரிவித்த வங்கி அதிகாரிகள், அவருக்கு, சக்கர நாற்காலி ஒன்றை அளிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement