புதுடில்லி, கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் எட்டு பேருக்கு, ஜாமின் அளித்து உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
குஜராத் மாநிலம் கோத்ராவில், 2002ல் கரசேவகர்கள் பயணித்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு விஷமிகள் தீ வைத்தனர். இதில், 59 பக்தர்கள் பலியாகினர்.
இந்த வழக்கில் குஜராத் சிறப்பு நீதிமன்றம், 11 பேருக்கு துாக்கு தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் அளித்து உத்தரவிட்டது.
மேல் முறையீட்டில், 11 பேரின் துாக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், தண்டனை பெற்றவர்களில் 12 பேர், ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆயுள் தண்டனை பெற்றவர்களில் எட்டு பேர், ஏற்கனவே 17 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்து விட்டதால், அவர்களுக்கு நிபந்தனையுடன் ஜாமின் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஆனாலும், நான்கு பேருக்கு, அவர்களது குற்றத்தின் தன்மை கருதி ஜாமின் மறுக்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement