புதுடில்லி : பொது நிர்வாகத்துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக, 15 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு பிரதமர் விருது நேற்று வழங்கப்பட்டன. இவற்றில், கொரோனா தடுப்பூசி திட்டத்தை சிறப்பாக செய்து முடித்த மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் மற்றும் ஹர் கர் ஜல் யோஜ்னா திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் 100 சதவீத வீடுகளுக்கு குடிநீர் குழாய் வசதி செய்து முடித்த, தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்திக்கு விருது வழங்கப்பட்டன.
ஆண்டுதோறும் ஏப்., 21ம் தேதி, ‘சிவில் சர்வீசஸ்’ எனப்படும், குடிமைப் பணியாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினத்தில் சிறப்பாக பணியாற்றிய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு பிரதமர் விருது வழங்கி மத்திய அரசு கவுரவிக்கிறது.
இந்நிலையில், 16வது குடிமைப் பணியாளர்கள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதில், 2022ம் ஆண்டுக்கான பிரதமர் விருது வழங்கும் விழா, புதுடில்லியில் உள்ள விஞ்ஞான் பவன் அரங்கில் நேற்று நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று விருதுகளை வழங்கினார்.
‘ஆப்பரேஷன் பரிவர்தன்’
இதில், மத்திய – மாநில மற்றும் மாவட்ட அளவில் பொது நிர்வாக துறையில் சிறப்பாக பணியாற்றிய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. மொத்தம், 748 மாவட்டங்களில் இருந்து, 2,520 பரிந்துரைகள் விருதுக்காக பெறப்பட்டன.
இவற்றில், கொரோனா தடுப்பூசி திட்டத்தை மிக சிறப்பாக செயல்படுத்தியதற்காக, மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷணுக்கு விருது வழங்கப்பட்டது.
தொழில் துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக வளர்ச்சி துறையின், பிரதமர் கதிசக்தி தேசிய மாஸ்டர் பிளான் திட்டத்துக்கும் விருது வழங்கப்பட்டது. இந்த இரண்டு விருதுகளும் மத்திய அரசு பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டன.
மாநிலங்களின் பிரிவில், ஜம்மு – காஷ்மீர் இளைஞர்களை நல்வழிப்படுத்திய, ஜம்மு – காஷ்மீர் இளைஞர்கள் திட்டத்துக்கும், உடல் உறுப்பு மாற்றத்தில் குஜராத்தின் மாநில உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்புக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
மாவட்டங்களின் பிரிவில், மஹாராஷ்டிராவின் சோலாபூரில் நிறைவேற்றப்பட்ட, ‘ஆப்பரேஷன் பரிவர்தன்’ திட்டத்துக்கு விருது அளிக்கப்பட்டது.
கள்ள சாராயம் தயாரிப்பை ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த திட்டத்தால், அம்மாநிலத்தில் 75 – 80 சதவீத கள்ள சாராய தயாரிப்பு ஒழிக்கப்பட்டதற்கு இந்த விருது வழங்கப்பட்டது.
விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகளின் வருவாயை அதிகரிக்க செய்த, ‘சன்வர்தன்’ திட்டத்துக்காக, உத்தர பிரதேசத்தின் ராம்பூர் மாவட்டத்துக்கு விருது அளிக்கப்பட்டது.
சுத்தமான குடிநீர்
ஹர் கர் ஜல் யோஜ்னா திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு சுத்தமான குடிநீர் அளிக்கும் திட்டத்தில், தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் மத்திய பிரதேசத்தின் புர்ஹான்புர் மாவட்டம் விருதுகளை வென்றன. காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி விருதை பெற்றுக் கொண்டார்.
‘சமக்ரா சிக் ஷா’ திட்டத்தின் கீழ், தரமான கல்வி அளித்ததற்காக, உ.பி.,யின் சித்ரகூட், குஜராத்தின் மஹேசனா ஆகிய மாவட்டங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
மத்திய அரசின் துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், சுகாதார மையங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்காக மஹாராஷ்டிராவின் லத்துார் மற்றும் ஆந்திராவின் அனகபள்ளி மாவட்டங்கள் விருதுகளை வென்றன.
வளர்ந்து வரும் மாவட்டங்களுக்கான பிரிவில், ஜம்மு – காஷ்மீரின் பாரமுல்லா மற்றும் ஜார்க்கண்டின் கும்லா ஆகிய மாவட்டங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
‘வளர்ச்சிக்கு நீங்களே காரணம்!’
விழாவில் விருதுகளை வழங்கி, பிரதமர் மோடி பேசியதாவது:ஆட்சியில் இருக்கும் ஒரு அரசியல் கட்சி வரி செலுத்துவோரின் பணத்தை தன் சொந்த நலனுக்காக பயன்படுத்துகிறதா அல்லது நாட்டுக்காக பயன்படுத்துகிறதா என்பதை ஆய்வு செய்வது அரசு ஊழியர்களின் கடமை. மத்திய – மாநில அரசு ஊழியர்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும், தேச நலனில் அக்கறை கொள்ள வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு அதிகாரிகளே பொறுப்பு. உங்கள் துடிப்பான பங்களிப்பு இன்றி வளர்ச்சி சாத்தியம் இல்லை. இந்தியா மீதான சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நமக்கான நேரம் கனிந்துவிட்டதாக சொல்கின்றனர். இனியும் அதிகாரிகள் காலத்தை விரயம் செய்யக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்