ராணிப்பேட்டையில் அரசினர் இல்லத்தில் இருந்து 4 சிறார்கள் தப்பியோட்டம்.!
சமீப நாட்களாகவே சிறார் பள்ளிகளில் இருந்து சிறுவர்கள் தப்பித்து செல்லும் சம்பவம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், ராணிப்பேட்டையில் உள்ள அரசினர் குழந்தைகள் இல்லத்தில் சிறுவர்கள் தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காரை கூட்ரோடு பகுதியில் சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லம் செயல்பட்டு வருகிறது. சமூகநலத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் இந்த இல்லத்தில் ஏராளமான சிறுவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த இல்லத்தில் இருந்து நான்கு சிறுவர்கள் நேற்றைய தினம் மழை பெய்த போது, துணிகளை எடுப்பதற்காக மாடிக்குச் சென்றுள்ளனர். அவ்வாறு வெளியே சென்றவர்கள் மீண்டும் இல்ல வளாகத்திற்குள் திரும்பவில்லை.
இதனால், சந்தேகமடைந்த பணியாளர்கள் சிறுவர்களை எங்கு தேடியும் கிடைக்கவில்லை, அதன் பின்னர் இல்ல பணியாளர்கள் சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சிறுவர்களை தேடி வருகின்றனர்.