சென்னை : அதிமுக ஆட்சிக் காலத்தில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக வாங்கிய லேப்டாப்களை உரிய காலத்தில் வழங்காததால் அரசுக்கு 68 கோடி ரூபாய் தேவையற்ற இழப்பு ஏற்பட்டுள்ளதாக சி.ஏ.ஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022 மார்ச் மாதத்துடன் முடிந்த மாநில நிதிநிலை மீதான இந்திய தணிக்கைத் துறை தலைவரின் (CAG) அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் பற்றிய சி.ஏ.ஜி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்தவகையில், மாணவர்களுக்கு மடிக்கணினி வாங்கியதில் அரசுக்கு தேவையற்ற இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017-18ஆம் ஆண்டு போட்டி தேர்வுக்கு தயாராகும் 12ஆம் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்க அரசின் உத்தரவின் பேரில் ELCOT நிறுவனம் சார்பில், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மடிக்கணினிகள் கொள்முதல் செய்யப்பட்டன. அதில், 8 ஆயிரத்து 79 மடிக்கணிகள் மட்டுமே போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
55 ஆயிரம் மடிக்கணினிகளை தேவைப்படும் மாணவர்களுக்கு வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்காததால், இந்த மடிக்கணினிகளின் பேட்டரிகள் வாரண்டி காலாவதி ஆகிவிட்டதாகவும், இதனால், 68 கோடியே 71 லட்சம் ரூபாய் தேவையற்ற செலவு ஏற்பட்டுள்ளதாகவும் தலைமை கணக்கு தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேபோன்று கடந்த 2016-ம் ஆண்டு பின்தங்கிய நிலையில் உள்ள பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்ட தமிழ்நாடு எக்செல்ஸ் திட்டமும் குறைந்த பலன் கொடுத்து தோல்வியுற்றதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.