அமிர்தசரஸ்: கடந்த மார்ச் 18-ம் தேதியில் இருந்து தேடப்பட்டு வந்த அம்ரித் பால் சிங் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது அம்ரித் பால் சிங் பற்றிய கேள்விக்கு அளித்த பதில் கவனம் பெற்றுள்ளது.
மறைந்த நடிகர் தீப் சித்துவால் உருவாக்கப்பட்ட அமைப்பு ‘வாரிஸ் பஞ்சாப் டி’. இந்த அமைப்பை தற்போது அம்ரித் பால் சிங் தலைமையேற்று நடத்தி வருகிறார். இவரது அடாவடி மற்றும் வன்முறை நடவடிக்கைகள் அந்த பஞ்சாப் மாநில போலீசாருக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அம்ரித்பால் சிங்கின் கூட்டாளி ஒருவர், அமிர்தசரசில் உள்ள காவல் நிலையத்தில் போலீசாரால் பிடித்து வைக்கப்பட்டு இருந்தார். அவரை மீட்பதற்காக அம்ரித் பால் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போருக்கு போவது போல சென்று காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் காவல்துறை உயர் அதிகாரி உள்பட 6 பேர் காயம் அடைந்தனர்.
இதனால், நிலமையை சமாளிக்க அம்ரித்பால் சிங் கூட்டாளியை போலீஸ் விடுவித்தது. இந்த விவகாரம் பஞ்சாப் மாநில காவல்துறைக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது. இதையடுத்து, அம்ரித்பால் சிங்கை கைது செய்யும் நடவடிக்கையில் பஞ்சாப் காவல்துறை தீவிரம் காட்டியது. ஆனால், போலீசாருக்கு தண்ணி காட்டிய அம்ரித் பால் சிங் தலைமறைவு ஆனார்.

ஒரு மாதத்திற்கும் மேலாக அம்ரித் பால் சிங்கை பஞ்சாப் போலீஸ் தேடி வந்தது. ஆனால், அவரை கைது செய்ய முடியவில்லை. அம்ரித்பால் சிங்கை பஞ்சாப் போலீஸ், அசாம் போலீஸ் மற்றும் தேசிய பாதுகாப்பு படை இணைந்து தேடி வந்தது. கடந்த மார்ச் 18-ம் தேதியில் இருந்து தேடப்பட்டு வந்தார். இந்த நிலையில் பஞ்சாப்பில் இருக்கும் மோகா என்ற கிராமத்தில் இவர் போலீசில் சரண் அடைந்தார்.
இதைத் தொடர்ந்து போலீசாரால் அம்ரித் பால் சிங் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்த சட்டத்தின் கீழ் எந்த காரணமும் இன்றி ஒருவரை ஒரு வருடம் சிறையில் அடைத்து வைக்க முடியும் என்பது கவனிக்கத்தக்கது. கிட்ட தட்ட 37 நாட்கள் போலீசாருக்கு போக்கு காட்டி வந்த அம்ரித் பால் சிங் இன்று கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
அம்ரித் பால் சிங் கைதையடுத்து மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அமைதி காக்குமாறும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது அம்ரித் பால் சிங் பற்றிய கேள்விக்கு அளித்த பதில் கவனம் பெற்றுள்ளது.

அமித்ஷா கூறும் போது, “இதற்கு முன்பு அம்ரித் பால் சிங் சுதந்திரமாக நடமாடி வந்தார். ஆனால் தற்போது அவரால் அப்படி இருக்க முடியவில்லை. தனது நடவடிக்கைகளையும் அவரால் செய்ய முடியவில்லை. கைது என்றாவது ஒருநாள் நடக்கும்” என்று கூறியிருந்தார்.
தொடர்ந்து பஞ்சாபில் அம்ரித் பால் சிங் மற்றும் காலிஸ்தானுக்கு ஆதரவான அலை உள்ளதா? என்று அமித்ஷாவிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமித்ஷா, “பஞ்சாபில் காலிஸ்தன் அலை இல்லை. அரசு தனது பணியை செய்து வருகிறது. நிலமையை நாங்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். இந்தியாவின் ஒற்றுமை மற்றும் இறையாண்மைக்கு யாரும் ஊறு விளைவிக்க முடியாது” என்றார்.