மோகா: காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் பஞ்சாபின் மோகா பகுதியில் கைது செய்யப்பட்டார். 37 நாட்களுக்குப் பின்னர் காவல்துறை அவரைக் கைது செய்துள்ளது. கைதைத் தொடர்ந்து அவர் அசாம் மாநிலம் திப்ருகர் சிறையில் அடைக்கப்படுகிறார்.
பஞ்சாபைச் சேர்ந்த காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித் பால் சிங் ‘அனந்த்புர் கல்சா ஃபவுஜ்’என்ற பெயரில் தீவிரவாத குழுவை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவந்தார். அவரை கைது செய்ய போலீஸார் முடிவு செய்தனர். இதையடுத்து அவர் தலைமறைவானார். அவர் நேபாளத்துக்கு தப்பிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து அவர் ஆடியோ, வீடியோ என்று வெளியிட்டு போலீஸுக்கு சவால்விடுத்து வந்தார். இந்நிலையில் 37 நாட்களுக்குப் பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து பஞ்சாப் காவல்துறை தரப்பில் பகிரப்பட்ட ட்வீட்டில், 29 வயதான அம்ரித்பால் சிங், மோகா மாவட்டம் ரோடே கிராமத்தில் உள்ள குருத்வாராவில் சரணடைந்தார். ரோடே கிராமத்தில் அவர் பதுங்கியிருப்பதாக எங்களுக்கு நம்பத்தகுந்த வட்டார்த்திலிருந்து தகவல் வந்தது. இதனையடுத்து நாங்கள் அப்பகுதியை சுற்றிவளைத்தோம். தப்பிக்க வேறு வழியே இல்லாததால் அவர் சரணடைந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் காவல்துறை ஐஜி சிங் கில் இதனை உறுதி செய்துள்ளார்.
#AmritpalSingh arrested in Moga, Punjab.
Further details will be shared by #PunjabPolice
Urge citizens to maintain peace and harmony, Don’t share any fake news, always verify and share.
— Punjab Police India (@PunjabPoliceInd) April 23, 2023
கைதாகும்போது அம்ரித்பால் சிங் வெள்ளை நிற பாரம்பரிய ஆடை, தலையில் காவி நிற தலைப்பாகை மற்றும் தோலில் வாள் ஆகியனவற்றை அணிந்திருந்தார்.
பாகிஸ்தான் தொடர்பு: அம்ரித்பால் சிங்குக்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகவும் அவர்கள் மூலம் ஆயுதங்களைப் பெற்று பஞ்சாபில் இளைஞர்களை துப்பாக்கிக் கலாச்சாரத்திற்கு தூண்டுவதாகவும் மத்திய புலனாய்வு அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன. அம்ரித்பால் சிங் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள என்பது குறிப்பிடத்தக்கது.