மதுரை: காவல்துறையினரின் துரித நடவடிக்கையால் மட்டுமே தென்மாவட்ட சாதிய மோதல்களை தடுக்கலாம் என, தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்தார்.
மதுரையில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்க தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான் பாண்டியன் மதுரை வந்தார்.
விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் அதில் தொடர்புடைய நபர்களை பிடிக்க மாட்டார்கள் என, முன்பே குறிப்பிட்டிருந்தேன். இருபுறமும் இருந்து அவர்களுக்கு வாக்குவேண்டும். யார் என, காவல்துறைக்கும், அரசுக்கும் தெரிந்தாலும், அவர்களை கைது செய்யாமல் இருக்கும் நோக்கம் வாக்குகள் பெற முடியாமல் போய்விடுமோ என்பது தான்.
பட்டியல் இனத்திலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்பது எங்களது நீண்ட ஆண்டு கோரிக்கை. பட்டியல் இனத்திலிருந்து தேவேந்திர குல வேளாளர்கள் வெளியே செல்லவேண்டும் என, மக்கள் விரும்புவதால் வலியுறுத்தி பிரச்சாரம் செய்கிறோம்.
அதிமுக விரிசல் விவகாரத்தில் தேர்தல் ஆணையமே எடப்பாடி தான் பொதுச் செயலர் என, சொல்லிவிட்டது. இதற்கு மேல் பேச வேண்டியது எதுவும் இல்லை. தொண்டர்களின் குழப்பத்திற்கு அது காரணமாக இருக்காது. எடப்பாடிக்கு தரப்பிக்கே இரட்டை இலை சின்னம் கிடைக்கப் போகிறது.
தொழிலாளர்கள் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்பது தவறானது. 8 மணி நேரம் வேலை செய்வதற்கே சிரமப்படுகின்றனர். 12 மணி நேரம் வேலை செய்தால் ஒரு நாள் கூடுதல் விடுப்பு என்பது நல்ல முன்னுதாரணம் அல்ல.
திமுக ஆட்சியில் சாதிய மோதல் இல்லை என்று முதல்வர் கூறியுள்ளார். ஆனாலும், ஒரு வாரத்துக்கு முன்பு கூட பரமக்குடியில் சாதிக் கலவரம் நடந்துள்ளது. கல்லூரி விழா ஒன்றில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு மாணவனை ஆசிரியரும், மாணவரும் துன்புறுத்தியது குறித்து வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
கடலாடி பள்ளியில் ஆசிரியர் தாக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு மட்டும் செய்யப் பட்டுள்ளது. காவல்துறை துரிதமாக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சாதிய கலவரங்களை தடுக்க முடியும். சாதி கலவரத்தை தடுக்க முதல்வரின் கண்காணிப்பு அவசியம் தேவை.” இவ்வாறு அவர் கூறினார்.