திருச்சூர் : கேரளாவில் 8 வயது சிறுமி, செல்போனில் வீடியோ பார்த்துக்கொண்டிருந்தபோது, திடீரென செல்போன் வெடித்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதுமே செல்போன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குழந்தைகள் பேசத் தொடங்குவதற்கு முன்பே செல்போன் பார்க்கத் தொடங்கி விடுகின்றனர். செல்போன்கள் அதிநவீன வசதிகள் அதிகரிப்பது ஒருபுறம் இருக்க, செல்போன்களால் ஏற்படும் விபத்துகளும் தொடர்கதையாகி வருகின்றன.
சார்ஜ் போட்டு பேசிக் கொண்டிருந்தபோது செல்போன் வெடித்தது, நீண்ட நேரம் கேம் விளையாடிக் கொண்டிருந்தபோது போன்ற செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. போன் வெடிப்பதால் சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இதனால் செல்போன் மீது ஒருவித அச்சமும் ஏற்பட்டு வருகிறது. செல்போனால் சிறுமி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் திரிச்சூர் மாவட்டம் பட்டிப்பறம்பு என்ற ஊரைச் சேர்ந்த அசோக் குமார் என்பவரின் மகள் ஆதித்யா ஶ்ரீ, அங்குள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்தார். 8 வயது சிறுமியான ஆதித்யா ஸ்ரீ நேற்று இரவு 10.30 மணி அளவில் மொபைல் போனில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக திடீரென சிறுமி ஆதித்யா ஸ்ரீ கையில் வைத்திருந்த செல்போன் வெடித்துச் சிதறியதில், சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், செல்போன் வெடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று தடயவியல் ஆய்வு நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செல்போன் வெடித்ததில் 8 வயது சிறுமி பலியான சம்பவத்தை தொடர்ந்து குழந்தைகளிடம் அதிக நேரம் மொபைல் போனை கொடுக்க வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.