சாப்பாடு போட மறுத்த மனைவி.!! நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயன்ற கணவர் கைது.!
தென்காசி மாவட்டத்தில் உள்ள வல்லம் கலைஞர் காலனி பகுதியைச் சேர்ந்தவர்கள் சந்தனகுமார்-கௌசல்யா தம்பதியினர். இவர்கள் குடியிருக்கும் பகுதியில் உள்ள சந்தன மாரியம்மன் கோயிலில் கொடை விழா நடைபெற்ற நிலையில் விழாவிற்குச் செல்வதற்காக சந்தனகுமாருக்கு அவரது மனைவி கௌசல்யா சாப்பாடு எடுத்து வைத்து விட்டு செல்ல முயன்றார்.
அப்போது, சந்தனகுமார் மனைவியிடம், சாப்பாடு பரிமாறிய பின்பு நீ கோயிலுக்குச் செல்லலாம் என்று தெரிவித்துள்ளார். இருப்பினும் கௌசல்யா கோவிலுக்கு செல்ல முயன்றுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த சந்தனகுமார், நீ கோயிலுக்குச் சென்றால் கொலை செய்து விடுவேன் என்று காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதற்காக வீட்டில் தயாரித்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை எடுத்து கௌசல்யாவை நோக்கி வீசினார்.
இதில், கௌசல்யா படுகாயமடைந்து ரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் கௌசல்யாவை மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக தகவல் அறிந்த போலீஸார், சந்தனகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.