புதுடில்லி, இரண்டு மகன்களுக்கு விஷம் கொடுத்து கொன்றதற்காக ஆயுள் தண்டனை பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு, தண்டனையை குறைத்து உச்ச நீதிமன்றம் விடுவித்தது.
கள்ளக்காதலன் மிரட்டல் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான தமிழகத்தைச் சேர்ந்த பெண், தற்கொலை செய்ய முடிவு செய்தார்.
பூச்சி மருந்து வாங்கி தன் இரு மகன்களுக்கும் தந்து, அவர் சாப்பிட முயன்றபோது, உறவினர் ஒருவரால் காப்பாற்றப்பட்டார்.
இந்த சம்பவத்தில், அந்த பெண்ணின் இரு மகன்களும் உயிரிழந்தனர்.
இந்த வழக்கில், 2005ல் அந்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிறையில் அடைக்கப்பட்ட அந்தப் பெண், தண்டனை குறைப்பு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் 2019ல் முறையீடு செய்தார். இதை, உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, 20 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் தனக்கு, தண்டனையை குறைத்து விடுவிக்க வேண்டும் எனக் கோரி, அந்த பெண் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு:
ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பெண்ணுக்கு தண்டனை குறைப்பு வழங்க மாநில கமிட்டி பரிந்துரை செய்தும், அதை தமிழக அரசு மறுத்துள்ளது.
கள்ளக்காதலை தொடர, அந்தப் பெண் தன் பிள்ளைகளை கொன்றது கொடூரமான குற்றம் என, நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.
இவர் கள்ளக்காதலனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாகத் தான், மன உளைச்சலில் பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து, தானும் தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். எனவே, இதை கொடூர குற்றம் என வரையறுக்க முடியாது.
நீதிமன்றங்கள் சட்டத்தின் ஆட்சிக்கு கட்டுப்பட்டதே தவிர, ஒழுக்கம் மற்றும் நெறிமுறைகள் குறித்து பிரசங்கம் செய்வது அவற்றின் வேலை இல்லை.
எனவே, மனுதாரருக்கு தண்டனையை குறைத்து, அவரை விடுவிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்