இம்பால் : மணிப்பூரில் நிலவி வரும் கலவரம் காரணமாக மாநில அரசின் வேண்டுகோளை ஏற்று நாளை நடக்கவிருந்த நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் நீட் தேர்வு தள்ளிவைப்பு பற்றிய அறிவிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் மெய்தி என்ற சமூகத்தினர் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர். மெய்தி சமூகத்தவரை பழங்குடி பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மணிப்பூரில் பழங்குடியினர் போராட்டங்களை நடத்தி வந்தனர். பழங்குடியினருக்கும் மெய்தி சமூகத்தினருக்கும் இடையே கடந்த 3-ஆம் தேதி மோதல் உருவானது. இரு தரப்பினர் நடத்திய ஊர்வலம், வன்முறையாக மாறி கலவரம் வெடித்தது.
கலவரம் பல்வேறு மாவட்டங்களுக்கும் பரவி, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள், வீடுகள், பள்ளிக்கூடங்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றை கலவரக்காரர்கள் அடித்து நொறுக்கி, தீ வைத்துக் கொளுத்தினர். இதுவரை 13 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு புகலிடங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
வன்முறை மற்றும் பதற்ற சூழலால், இதுவரை அப்பாவி மக்கள் 54 பேர் உயிரிழந்துள்ளனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் குவிக்கப்பட்டனர். வன்முறை பல மாவட்டங்களுக்கு பரவியதும், அரசு தீவிர நடவடிக்கை எடுத்தது. இணையதள சேவையை முடக்கி, ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது.
நிலைமை அத்துமீறிச் சென்ற நிலையில், வன்முறை பரவாமல் தடுக்கும் நோக்கில், 5 நாட்களுக்கு மணிப்பூரில் இணைய தள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், வன்முறையை கட்டுப்படுத்த 8 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவையும் அரசு அமல்படுத்தியது. அசாதாரண சூழலில் வன்முறையை கட்டுப்படுத்த, கலவரக்காரர்களை கண்டதும் சுடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியா முழுவதும் நாளை நடக்கவிருந்த நீட் தேர்வுகள் மணிப்பூரில் நடக்குமா என கேள்வி எழுந்தது. மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக மாநில அரசின் வேண்டுகோளை ஏற்று நாளை நடக்கவிருந்த (மே 7) நீட் தேர்வை ஒத்துவைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், மணிப்பூரில் தற்போதுள்ள சூழலில், மாணவர்களால் நீட் தேர்வில் கலந்து கொள்ள முடியாது. இணையதள இணைப்பு பிரச்சனை ஏற்படும். அதனால், தேசிய தேர்வு முகமையிடம் தேர்வு தேதியை மாற்றி அறிவிக்கவோ அல்லது தள்ளி வைக்கவோ செய்யும்படி கேட்டு கொண்டேன். அதன்படி தேர்வு தள்ளிவைப்பு பற்றிய அறிவிப்பை என்.டி.ஏ. வெளியிட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.