பெலகாவி, : ”சுதந்திர போராட்ட வீரரான வீர் சாவர்க்கரை காங்கிரஸ் மீண்டும் மீண்டும் அவமதிக்கிறது. பத்து பிறவி எடுத்தாலும், அவர் செய்த தியாகத்தை போன்று பார்க்க முடியாது,” என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
பெலகாவி மாவட்டம் சவதத்தி எல்லம்மாவில் நேற்று நடந்த பா.ஜ., பிரசார கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது:
பிரதமர் நரேந்திர மோடியை, மக்கள் நம்புகின்றனர். ஆனால், மல்லிகார்ஜூன கார்கே, மோடியை விஷப்பாம்பு என்கிறார். நீங்கள், மோடியை எவ்வளவு வேண்டுமானாலும் விமர்சனம் செய்யுங்கள். நீங்கள் எவ்வளவு விமர்சிக்கிறீர்களோ, அவ்வளவுக்கு அதிகமான தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெறும்.
கடந்த சட்டசபை தேர்தலில் பெலகாவி மாவட்டத்தின் 18 தொகுதிகளில் 11ல் பா.ஜ., வெற்றி பெற்றது. இம்முறை, 18 தொகுதிகளையும் கைப்பற்றும்.
வீர் சாவர்க்கரை காங்கிரஸ் மீண்டும் மீண்டும் அவமதிக்கிறது. பத்து பிறவி எடுத்தாலும், அவர் செய்தது போன்ற தியாகத்தை பார்க்க முடியாது. வீர் சாவர்க்கரின் உருவப் படம் பெலகாவி சுவர்ண விதான் சவுதாவில் வைக்கப்பட்டுள்ளது.
பெலகாவியில் இன்று (நேற்று) பிரசாரம் செய்து, இரவு இங்கேயே தங்குவேன். கர்நாடகா முழுதும் சுற்றி வந்துள்ளேன். வரும் 13ம் தேதி முழு பெரும்பான்மையுடன் பா.ஜ., ஆட்சிக்கு வரும். மோடி தலைமையில் கர்நாடகாவின் வட மாவட்டங்கள் வளர்ச்சி அடையும்.
கர்நாடகாவின் வட மாவட்ட விவசாயிகளுக்கு காங்கிரஸ் அநீதி இழைத்து வருகிறது. முன்னர், மஹாராஷ்டிரா, கோவாவில் காங்கிரஸ் ஆட்சி இருந்தது. அப்போது மகதாயி பிரச்னையை காங்கிரஸ் அரசு தீர்த்து வைத்ததா.
கடந்த 2007 ல் சோனியா, மகதாயி நதிநீரை கொடுக்க கூடாது என்றார். உங்கள் அரசு சென்றுவிட்டது. கர்நாடகாவுக்கு மகதாயி குடிநீரை திறந்துவிட, பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதானியில் நடந்த பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது:
காங்கிரஸ் பஜ்ரங்தளத்தை அவமதித்தது. முஸ்லிம்களுக்கு ஆறு சதவீதம் தருவதாக கூறினர். லிங்காயத்கள், தலித்கள் இடஒதுக்கீட்டை குறைக்கின்றனரா.
ரமேஷ் ஜார்கிஹோளி, மகேஷ் குமடள்ளி ஆகியோர் பா.ஜ.,வுக்கு வந்ததால், மாநிலத்தில் கட்சி ஆட்சிக்கு வந்தது.
ராகுல் சென்ற இடமெல்லாம் அக்கட்சி தோற்றது. தாமரை இன்னும் மலர, மோடியின் கையை பலப்படுத்துவோம். பி.எப்.ஐ., அமைப்பை தடை செய்தோம்.
ஒவ்வொரு வார்டிலும் அடல் உணவு மையம், பத்து லட்சம் வீடுகள் உட்பட பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்