LEO First Single – வெளியாகி 24 மணி நேரம்.. லியோ ஃபர்ஸ்ட் சிங்கிள் செய்த சாதனை

சென்னை: LEO first Single (லியோ ஃபர்ஸ்ட் சிங்கிள்) லியோ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான நா ரெடி பாடல் வெளியாகி 24 மணி நேரம் நிறைவடைந்திருக்கும் சூழலில் பாடல் 16 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார் விஜய். மாஸ்டர் கூட்டணியின் அடுத்த படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு படத்துக்கு எழுந்துள்ளது. இதன் காரணமாக படத்தின் ப்ரீ பிஸ்னெஸ்ஸும் இதுவரை 400 கோடி ரூபாய்க்கும் அதிகம் விற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. படத்தின் பட்ஜெட்டை ரிலீஸுக்கு முன்னதாகவே லியோ எடுத்துவிட்டது என விஜய் ரசிகர்கள் குஷியில் இருக்கின்றனர்.

ஷுட்டிங்: லியோ படத்தின் ஷூட்டிங் சென்னையில் பிரசாத் ஸ்டூடியோ, பையனூரில் நடந்ததைத் தொடர்ந்து தற்போது ஆதித்யராம் ஸ்டூடியோவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சமீபத்தில் 2000 நடன கலைஞர்கள் பங்கேற்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டதாக தெரிகிறது. அதேசமயம் 2000 நடன கலைஞர்கள் பங்கேற்கவில்லை 500லிருந்து 800 நடன கலைஞர்கள்தான் பங்கேற்றிருப்பார்கள் என்றும் புதிய தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. பாடல் ஷூட்டிங்கை முடித்த கையோடு தற்போது க்ளைமேக்ஸ் ஷூட்டிங்கை லோகேஷ் படமாக்கிவருகிறார்.

சண்டைக் காட்சிக்கு பத்து கோடி: படத்தின் க்ளைமேக்ஸில் பிரமாண்டமான சண்டை காட்சி செட் போடப்பட்டு எடுக்கப்பட்டு வருகிறதாம். மேலும் அதற்காக தயாரிப்பாளர் லலித் குமார் பத்து கோடி ரூபாயை வாரி இறைத்திருக்கிறார் என்ற பேச்சு இன்று காலையிலிருந்து வெளியாகி திரையுலகை ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதேபோல் படத்தில் இடம்பெறவிருக்கும் சிங்கத்துக்காக் 15 கோடி ரூபாய் செலவு செய்தார் என்ற தகவல் ஓடிக்கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஃபர்ஸ்ட் சிங்கிள்: இதற்கிடையே விஜய் தனது 49ஆவது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதன் காரணமாக லியோவிலிருந்து மொத்தம் இரண்டு அப்டேட்டுகள் வெளியாகின. அதன்படி முதலில் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. கையில் சுத்தியலுடன் ரத்தம் தெறிக்க தெறிக்க இருக்கும் அந்தப் போஸ்டர் சமூக வலைதளங்களில் பயங்கரமாக ட்ரெண்டாகியது. அதனையடுத்து படத்திலிருந்து நா ரெடி என்ற சிங்கிள் பாடல் வெளியானது.

வரவேற்பும், விமர்சனமும்: இந்தப் பாடல்தான் 2000 டான்ஸர்கள் ஆடியதாக கூறப்படும் பாடல்.பாடலை விஜய், அனிருத், அசல் கோளாறு பாட லோகேஷின் உதவி இயக்குநர் விஷ்ணு எடவன் எழுதியிருந்தார். பாடலுக்கு விஜய் ரசிகர்கள் பெரும் வரவேற்பை கொடுத்தாலும் ரசிகர்களில் ஒருதரப்பினர் பாடலின் வரிகளை சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சனம் செய்துவருகின்றனர்.மேலும் அரசியல் ஆசையுள்ள விஜய் வாயில் சிகரெட்டோடு ஆடுகிறாரே என்றும் அவர்கள் கூறினர்.

சாதனை: இந்நிலையில் பாடல் வெளியாகி 24 மணி நேரம் முடிவடைந்துள்ளது. இந்தச் சூழலில் யூட்யூபில் இதுவரை நா ரெடி பாடல் 16 மில்லியன் பார்வைகளை பெற்றிருக்கிறது. பாடல் வெளியாகி 24 மணி நேரத்துக்குள் இந்த மைல் கல்லை தொட்டிருப்பதால் மேலும் பல சாதனைகளை இந்தப் பாடல் படைக்கும் என விஜய் ரசிகரக்ள் நம்பிக்கை தெரிவித்துவருகின்றனர். லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.