வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகள் பீகார் தலைநகர் பாட்னாவில் நேற்று (ஜூன் 23) ஒன்றுகூடின. இந்த கூட்டத்துக்கான முன்முயற்சியில் ஈடுபட்டவர் பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளத் தலைவருமான நிதிஷ் குமார். ஏற்கெனவே, பா.ஜ.க-வுக்கு எதிரான கூட்டணியைக் கட்டமைக்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து ஒருங்கிணைப்பை ஏற்படுத்தினார் நிதிஷ் குமார்.
கொல்கத்தாவுக்குச் சென்று மம்தா பானர்ஜியை நிதிஷ் குமார் சந்தித்தபோது, அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்துக்கு பீகாரில் ஏற்பாடு செய்யுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார் மம்தா பானர்ஜி. அதன்படியே, பீகார் தலைநகர் பாட்னாவில் இந்தக் கூட்டம் நடைபெற்றிருக்கிறது.
வெவ்வேறு திசைகளில் பயணித்துக்கொண்டிருக்கும் இந்தக் கட்சிகள், ‘பா.ஜ.க எதிர்ப்பு’, ‘மோடி ஆட்சியைத் தூக்கியெறிய வேண்டும்’ என்கிற ஒரு புள்ளியில் இணைந்திருக்கிறார்கள். ஆனாலும், ஜூன் 23-ம் தேதி கூட்டத்துக்கு ஒப்புக்கொண்ட அத்தனை தலைவர்களும் வந்துவிடுவார்களா என்பது பெரும் கேள்விக்குறியாகவே இருந்தது. குறிப்பாக, ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் வருகை கேள்விக்குறியாக இருந்தது.

டெல்லி பிரதேச அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில், மத்திய பா.ஜ.க அரசு அவசரச் சட்டம் ஒன்றை கொண்டுவந்திருக்கிறது. அது தொடர்பான மசோதாவை மாநிலங்களவையில் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்களை கெஜ்ரிவால் சந்தித்திருக்கிறார். இந்த விவகாரத்தில் கெஜ்ரிவாலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சி எடுக்கவில்லை. எனவே, இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று கூட்டத்துக்கு முந்தைய நாள் கறார் காண்பித்தாலும், பாட்னா கூட்டத்தைத் தவிர்க்காமல் வந்துவிட்டார் கெஜ்ரிவால்
இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர்கள் லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவ், தி.மு.க தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின், தேசிய மாநாடு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா, சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி சார்பில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் சரத் பவார், சுப்ரியா சுலே, சிவசேனா தலைவர்கள் உத்தவ் தாக்கரே, சஞ்சய் ராவத், ஆதித்யா தாக்கரே, சி.பி.ஐ பொதுச்செயலாளர் டி.ராஜா, சி.பி.எம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, சி.பி.ஐ (எம்.எல் – லிபரேஷன்) பொதுச்செயலாளர் திபங்கர் பட்டாச்சார்யா, மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி உட்பட 17 கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க தோற்கடிக்கப்பட வேண்டும் என்பது குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. பா.ஜ.க எதிர்ப்பில் அனைத்துத் தலைவர்களும் உறுதியான நிலைப்பாட்டைத் தெரிவித்திருக்கிறார்கள். அடுத்தகட்டமாக, சிம்லாவில் ஜூலை 12-ம் தேதி அனைத்து தலைவர்களும் மீண்டும் கூடுவது என்று முடிவுசெய்திருக்கிறார்கள். அந்தக் கூட்டம் காங்கிரஸ் தலைவர் கார்கே தலைமையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பாட்னாவில் கூட்டம் முடிந்த பிறகு, தலைவர்கள் அனைவரும் ஒன்றாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, அரவிந்த் கெஜ்ரிவால், ஸ்டாலின் உள்ளிட்ட சிலர் மிஸ்ஸிங். மத்திய அரசின் அவசரச் சட்டத்தை எதிர்க்க வேண்டும் என்கிற ஆம் ஆத்மியின் வேண்டுகோள் குறித்து காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை. செய்தியாளர்கள் சந்திப்பில் கெஜ்ரிவால் பங்கேற்காததற்கான காரணம் அதுதான் என்கிறார்கள். காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்கவில்லை என்றால், அடுத்த கூட்டத்தில் ஆம் ஆத்மி பங்கேற்காது என்று அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டார். இந்த ஒரு விவகாரத்தைத் தவிர, வேறு முரண்பாடுகள் எதுவும் இந்தக் கூட்டத்தில் எழுந்ததாக தகவல்கள் இல்லை.

கொள்கை ரீதியிலான மோதல்கள் மட்டுமின்றி, களத்திலும் கடுமையாக மோதிக்கொண்டிருக்கும் திரிணாமுல் காங்கிரஸும், காங்கிரஸ் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஓர் இடத்தில் ஒன்றாகக் கூடி, பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டேதே வியப்பளிக்கும் நிகழ்வுதான். இவர்கள் மூவருமே பா.ஜ.க எதிர்ப்பு என்கிற ஒரு விஷயத்தில் முழுமையாக உடன்படுகிறார்கள். மம்தா பானர்ஜி, “மத்திய பா.ஜ.க அரசிடம் எல்லாவற்றுக்கும் போராட வேண்டியிருக்கிறது. எந்த விவகாரத்திலும் மாநில அரசுடன் மத்திய அரசு விவாதிப்பதில்லை. மத்திய விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். வரலாற்றை மாற்ற நினைக்கும் பா.ஜ.க-விடமிருந்து வரலாறு காப்பற்றப்பட வேண்டும்” என்று செய்தியாளர்கள் கூட்டத்தில் குறிப்பிட்டார்.
ராகுல் காந்தியோ, “இது ஒரு சித்தாந்தப் போர். நாங்கள் எல்லோரும் இணைந்து பா.ஜ.க-வை எதிர்ப்போம்” என்றார். இதே குரலைத்தான் அங்கு கலந்துகொண்ட அத்தனை தலைவர்களும் ஒலித்தார்கள். கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, பிறகு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொள்ளாத கெஜ்ரிவாலுக்கும், பா.ஜ.க தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. மத்திய அரசின் அவசரச் சட்டத்தைத் தோற்கடிப்பது என்ற முடிவை காங்கிரஸ் எடுத்தால், கெஜ்ரிவாலும் இந்தக் கூட்டணியில் இணைய வாய்ப்பு இருக்கிறது.

பாட்னா கூட்டத்தை “ஃபோட்டோஷூட்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டார். சரிதான். ஆனால், அது வெறும் ஃபோட்டோஷூட் என்று சொல்லிவிட்டு பா.ஜ.க எளிதாகக் கடந்துபோய்விட முடியாது. காரணம், முரண்பாடுகள் ஒதுக்கிவைத்துவிட்டு எதிர்க் கட்சிகள் முன்னேறுகின்றன என்பதையும் கவனிக்க வேண்டும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.