சென்னை: “பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் கட்டண உயர்வு குறித்து தமிழக முதல்வரின் கவனத்துக்கு சென்றவுடன் அறங்காவலர் குழுவினரை அழைத்து, இது அதிகப்படியான கட்டணம் என்று தெரிவித்து கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. வெகுவிரைவில் அறங்காவலர் குழு கூட்டத்தில் கட்டணத்தை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
“HRCE” கைபேசி செயலி: இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள், ஒரு கால பூஜை திட்டத்திலுள்ள திருக்கோயில் அர்ச்சகர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்களின் வருகை மற்றும் ஆய்வு விவரங்களை பதிவேற்றம் செய்திடும் வகையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள “HRCE”எனும் கைபேசி செயலியினை, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “இன்றைய தினம் இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள், ஒரு கால பூஜை அர்ச்சகர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்களின் வருகை மற்றும் ஆய்வு விவரங்களை புவி நிலை குறியீட்டு தகவல்களுடன் பதிவேற்றம் செய்யும் வகையிலான “HRCE” எனும் கைபேசி செயலி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் திருக்கோயில்கள் ஆய்வு, திருவிழா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், துறை அலுவலர்களின் ஒருங்கிணைப்பு கூட்டம், நீதிமன்ற நடவடிக்கைகள், உழவாரப் பணிகள், திருப்பணிகள் ஆய்வு போன்ற நடவடிக்கைகளை புகைப்படங்களாகவும், குரல் வழி செய்திகளாகவும் பதிவு செய்யவும், ஆவணங்களை பதிவேற்றவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் 1250 கிராமப்புறத் திருக்கோயில்கள் மற்றும் 1250 ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்களின் திருப்பணிக்கு வழங்கப்படும் தலா ரூ.2 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும் கண்காணிக்க முடியும். இச்செயலியில் பதிவு செய்யப்படும் விவரங்களின் அடிப்படையில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் பணிகளை செம்மைப்படுத்தி, தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ள இயலும். இத்தகைய நவீன தொழில்நுட்ப வசதிகளை செயல்படுத்துவதற்கு ஆக்கமும், ஊக்கமும் வழங்கி வருகின்ற தமிழக முதல்வருக்கு துறையின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலை பொறுத்தளவில் ஒவ்வொரு அடியையும் மிக கவனத்தோடு, நிதானத்துடன் எடுத்து வைத்துக் கொண்டிருக்கின்றோம். சட்ட விரோதமான நடவடிக்கைகளை தீட்சிதர்கள் கையில் எடுத்துக் கொள்கிறார்கள். நகை சரிபார்ப்பு பணிக்கு துறை சார்ந்த அலுவலர்கள் சென்றபோது உரிமை இல்லை என்று தெரிவித்து நீதிமன்றத்துக்கு செல்வோம் என்று தெரிவித்தார்கள். ஆனால் இதுவரை செல்லவில்லை. பக்தர்களின் நலன்களுக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளிலிருந்து துறை ஒருநாளும் பின்வாங்க போவதில்லை. அதற்குண்டான ஆதாரங்களை திரட்டி கொண்டிருக்கிறோம்.
யானைகள் பராமரிப்பு: யானை திருக்கோயிலின் ஓர் அங்கமாக கருதப்படுகிறது. மன்னர்கள் காலத்திலிருந்து சுவாமி ஊர்வலமே யானையின் மீதுதான் நடத்தப்பட்டு வருகிறது. சபரிமலையில்கூட சுவாமி நீராடுவதற்கு யானைமீது வருகின்ற நிகழ்வு நடந்து வருகிறது. சட்ட திட்டங்களுக்குட்பட்டு புதிய யானைகள் வாங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். திருக்கோயில்களில் பராமரிக்கப்பட்டு வரும் யானைகளுக்கு மருத்துவர்களின் அறிவுரைப்படி உணவும், 15 நாட்களுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்படுவதோடு, அவை நடைபயிற்சி செல்வதற்கும், குளிப்பதற்கு குளியல் தொட்டிகளும் அமைக்கப்பட்டு சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
மூடப்பட்ட கோயில்கள் திறக்கப்படும்: கருத்து வேறுபாடுகள் காரணமாக மூடப்பட்டிருந்த திருக்கோயில்களை திறப்பதற்கு தமிழக முதல்வர் தலைமையிலான அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை அவ்வாறு மூடப்பட்டிருந்த 9 திருக்கோயில்களான மதுரை, கள்ளிக்குடி, வாலகுருநாத சுவாமி திருக்கோயில், திருவண்ணாமலை, தென்முடியனூர், முத்துமாரியம்மன் திருக்கோயில், சேலம், திருமலைகிரி, மாரியம்மன் திருக்கோயில், கூனாண்டியூர், மாரியம்மன் திருக்கோயில், வடகுமரை காளகஸ்தீஸ்வரர் திருக்கோயில், புதுக்கோட்டை, இறையூர், அய்யனார் திருக்கோயில், விராலிமலை, தென்னிலைப்பட்டி, முத்துமாரியம்மன் திருக்கோயில், கரூர், வீரணம்பட்டி, காளியம்மன் திருக்கோயில், திருவாரூர், செம்பியன் கூந்தலூர், காளியம்மன் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.
திராவிட மாடல் ஆட்சியை பொறுத்தளவில் அனைவரும் சமம், உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற நிலை இருக்கக்கூடாது என்பதில் மிக தெளிவாக எங்களின் பயணம் தொடர்ந்து கொண்டு இருக்கின்றது.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை செயல்படுத்திய ஆட்சி தமிழக முதல்வரின் ஆட்சி என்பதால் சாதி ரீதியாக மக்களிடையே பிளவு ஏற்படாமல் இருப்பதற்காக மூடப்பட்டுள்ள இதர திருக்கோயில்களை திறப்பதற்கு இன்றைய தினம் இணை ஆணையர்கள் அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரச்சனைகள் எழுகின்ற திருக்கோயில்களில் இந்து சமய அறநிலையத்துறை முழுமையாக தன்னை ஆட்படுத்திக் கொண்டு சுமுகமான சூழலை உருவாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கு 80 ஆண்டுகள், 12 ஆண்டுகள் என்று நீண்ட காலமாக திறக்கப்படாமல் இருந்த திருக்கோயில்களை திறந்ததே சான்றாகும்.
பழநி கோயில் கட்டண விவகாரம்: பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 1997-ஆம் ஆண்டுக்குப் பிறகு கட்டணம் உயர்த்தப்படாமல் இருந்தது. பல்வேறு வகைகளில் பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக 25 ஆண்டுகளுக்கு பிறகு திருக்கோயிலின் அறங்காவலர் குழு தீர்மானம் நிறைவேற்றி கட்டண உயர்வை செய்திருக்கிறார்கள். இது தொடர்பாக தமிழக முதல்வரின் கவனத்துக்கு சென்றவுடன் அறங்காவலர் குழுவினரை அழைத்து, இது அதிகப்படியான கட்டணம் என்று தெரிவித்து கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. வெகுவிரைவில் அறங்காவலர் குழு கூட்டத்தில் கட்டணத்தை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
முன்னதாக, இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், அமைச்சர் சேகர்பாபு, திருப்பதி போல பழநியை மாற்றி காட்டுகிறோம் என்று கூறினார். அவர் திருப்பதியில் வாங்கும் கட்டணத்தை போல உயர்த்தியிருக்கிறாரே தவிர திருப்பதியில் பக்தர்களுக்கு செய்யக்கூடிய வசதிகளையோ கோயில் பராமரிப்பையோ பழநியில் செய்யவில்லை. வெறும் வாய்ச்சவடால் மட்டும் பேசி தான் திறம்பட செயல்படுவதாக மக்களை ஏமாற்றுகின்றார்.தமிழக அரசு கட்டண உயர்வை ஏற்படுத்தாமல் அனைவருக்கும் இலவச தரிசன முறையை ஏற்படுத்தி தர வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.