காரைக்குடி: தமிழக மாணவர்கள் ஆங்கிலத்தில் மிகவும் பின்தங்கிவிட்டால், இருமொழிக் கொள்கை, ஒருமொழி கொள்கையாகிவிடும் என முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
10-ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது: தமிழக அரசு இருமொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டதில் மகிழ்ச்சி. அப்படியானால் மாணவர்கள் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் புலம்பெற்றிருக்க வேண்டும்.
தமிழ் எந்த அளவுக்கு சரளமாக பேச, எழுத முடிகிறதோ, அதே அளவுக்கு ஆங்கிலத்திலும் இருக்க வேண்டும். ஓரளவு வேறுபாடு இருக்கலாம். ஆங்கிலத்தில் மிகவும் பின்தங்கிவிட்டால், இருமொழிக் கொள்கை, ஒருமொழி கொள்கையாகிவிடும். கணிதத்தின் முக்கியத்துவத்தால் தான் வள்ளுவர் எண்ணை முதலிலும், எழுத்தை 2-வதாகவும் குறிப்பிட்டார். ஏனென்றால் கணிதம் இல்லாமல் எந்த துறையும் கிடையாது.
நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளில் இருந்து வெளியே வரும் மாணவர்களால் ஆங்கிலத்தில் சரளமாக பேச, எழுத முடிவதில்லை என்பது குறை. அதை குற்றமாக சொல்லவில்லை. மேலும் கணிதத்தை கண்டு பயப்படுகின்றனர். இனி கணிதம் இல்லாமல் எந்தத் துறையையும் படிக்க முடியாது. அனைத்து துறைகளிலும் ‘டேட்டா’ முக்கியமாக உள்ளது. ‘டேட்டா’ என்பது கணிதம் தான். இதனால் மாணவர்களை கணிதம், ஆங்கிலத்தில் புலம் பெற்றவர்களாக மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.