கர்நாடகாவில் ஒரு பல்ப் உள்ள வீட்டுக்கு மின் கட்டணம் ரூ.1 லட்சம் வந்ததால் 90 வயது மூதாட்டி அதிர்ச்சி

பெங்களூரு: கர்நாடகாவில் 90 வயதான மூதாட்டியின் வீட்டில் ஒரே ஒரு மின்சார பல்ப் மட்டுமே உள்ள நிலையில் அவருக்கு ரூ. 1 லட்சம் மின்சார கட்டண பில் வந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர் அனைவருக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களை காட்டிலும் மே மாதத்தில் அதிகளவில் மின்சார கட்டணம் வந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திடீர் மின்சார கட்டணத்தை கண்டித்து மாநிலம் தழுவியபோராட்டத்தில் தொழில் துறையினர் ஈடுபட்டுள்ளதால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கொப்பல் மாவட்டத்தில் உள்ள பாக்யநகரை சேர்ந்த கிரிஜம்மா (வயது 90) தனது வீட்டில் ஒரே ஒரு பல்ப் மட்டுமே பயன்படுத்துகிறார். இவருக்கு ஜூன் மாத மின்சார கட்டணமாக ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 315-க்கு பில் வந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கிரிஜம்மா, ‘‘இதுவரை மாதத்துக்கு ரூ.70 முதல் ரூ.90 வரை மட்டுமே மின்கட்டணம் வரும். இந்த முறை எப்படிரூ.1 லட்சத்துக்கும் அதிகமாக வந்தது” என மின்சார துறை ஊழியர்களிடம் கேள்வி எழுப்பினார். இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து மின்சாரத்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் கூறுகையில், ‘‘இயந்திர கோளாறு காரணமாக மூதாட்டிக்கு தவறான பில் வழங்கப்பட்டுள்ளது. எனவே அவர் அந்த தொகையை மின் கட்டணமாக செலுத்த வேண்டியதில்லை. மின்சாரத்துறை ஊழியர்கள் அவரது வீட்டுக்கு சென்று விளக்கம் அளித்துள்ளனர்” என்றார். உடனடியாக இந்தப் பிரச்சினையில் அமைச்சர் தலையிட்டதால் பிரச்சினை தீர்ந்துள்ளது.

உடுப்பியில் கடைக்கு ரூ.1 கோடி..: இதேபோல், உடுப்பி மாவட்டம் குந்தாபுராவில் உள்ள கடை ஒன்றுக்கு மே மாத மின்சார கட்டணமாக ரூ. 1 கோடி வந்ததால் அதன் உரிமையாளர் கிரிஷ் ஷெட்டி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ”கடந்த மாதத்தில் 13 லட்சத்து 11 ஆயிரத்து 155 யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான வரியுடன் சேர்த்து ரூ.1 கோடி மின் கட்டணம் செலுத்த வேண்டும் என மின்சாரத்துறை ஊழியர்கள் கூறினர். இதனால் எனக்கு கடும் மனஉளைச்சல் ஏற்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டதை தொடர்ந்து, மீண்டும் மறு கணக்கீடு செய்யப்பட்டது. அப்போது 1,574 யூனிட் மின்சாரம் மட்டுமே பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. ஆனால் ஊழியர்கள் இயந்திர கோளாறால் தவறு ஏற்பட்டதாக விளக்கம் அளித்தனர்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.